காற்பந்து போலவே ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் விளையாட்டுத் திருவிழா இந்த ஒலிம்பிக் போட்டி. ஒலிம்பிக் நடைபெறும் நாடு இந்த நிகழ்ச்சியை ஒரு திருவிழாவாகக் கொண்டாடும்.
‘வேகம், உயர்வு, வலிமை’ இதுவே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தாரக மந்திரம்.
விளையாட்டில் மகிழ்ச்சி, நியாயமான ஆட்டம், மற்றவர்களை மதித்தல், உன்னதத்தை நோக்கிய பயணம், உடல், மன உறுதியை சமன் செய்தல் ஆகியவையே ஒலிம்பிக் போட்டிகள் இந்த உலகுக்குச் சொல்லும் முக்கிய ஐந்து செய்திகள்.
ஜூலை 26ஆம் தேதி பாரிசில் நடைபெறும் 33வது ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 32 விளையாட்டுகள், 329 போட்டிகள் நடைபெறும்.
ஏறக்குறைய 10,500 வீரர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் இருந்து பாரிஸ் நகருக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல தங்குமிடங்கள் நிரம்பி வழிகின்றன என்று கூறப்படுகிறது.
ஒலிம்பிக்கில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. கோடைக்கால ஒலிம்பிக், குளிர்கால ஒலிம்பிக்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடைக்கால ஒலிம்பிக் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் குளிர்கால ஒலிம்பிக் நடக்கும்.
குளிர்கால ஒலிம்பிக் என்பது மலை மற்றும் குளிர் பிரதேசங்களில் நடக்கும்.
தொடர்புடைய செய்திகள்
ஒலிம்பிக் போட்டி முடிந்தவுடன், பாரா ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை பாரிசில் நடைபெறும்.
இந்தப் போட்டிகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டில் நடக்கும்.
இந்தப் போட்டியை நடத்தும் நாடுகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிகப்பெரிய பெருமையாகக் கருதுவார்கள்.