கவினோசொரஸ் என்ற சிறு ‘டைனோசர்’ விலங்குக்கு டிரம்ஸ் வாசிப்பதில் அதீத ஆர்வம் உள்ளது. ஆனால் அவனுடைய சிறிய கால்களால் அந்த டிரம்ஸ் இசைக்கருவியை எட்ட முடியவில்லை.
அந்த சவாலைத் தாண்டி கவினோசொரஸ் எவ்வாறு தனது டிரம்ஸ் வாசிக்கும் கனவை பூர்த்தி செய்கிறான் என்பதே ‘கவினோசொரஸ் தி டிரம்மிங் டினோ’ எனும் கதையாகும்.
இந்த ஆங்கில சிறுவர் கதை புத்தகத்தை தனது இரு மகன்களை அடிப்படையாகக் கொண்டு எழுதினார் விக்னேஸ்வரி ராஜூ, 38.
அவரது மூத்த மகன் கவினேஷ் சரவணனுக்கு, 10, டிரம்ஸ் வாசிக்க பிடிக்கும். அவரது இரண்டாவது மகன் சர்வேஷ் சரவணனுக்கு, 9, டைனசார் விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
சென்ற மே மாதம் 1ஆம் தேதியில் ‘கவினோசொரஸ் தி டிரம்மிங் டினோ’ எனும் ஆங்கில சிறுவர் கதை புத்தகத்தை எழுதி வெளியிட்டார் விக்னேஸ்வரி.
“என் இரு மகன்களும் எனக்கு ஒரு பெரிய உந்துதலாக அமைந்தனர்,” என்று கூறினார்.
கவினேஷ், தனது ஐந்து வயதில் வியன்னா இசைப் பள்ளியில் டிரம்ஸ் பயிலத் தொடங்கினார்.
டிரம்ஸ் இசைக்கருவியின் மீது அதிக ஆர்வமுள்ள கவினேஷ், ஏழு வயதில் முதன் முதலாக இசைத் தேர்வு ஒன்றை முடித்து லண்டன் இசைக் கல்லூரியிலிருந்து சான்றிதழ் பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், சிறு வயதிலிருந்தே கோவில்களிலும் இல்லங்jகளிலும் நடக்கும் பஜனை பாடுதல்களில் அவர்களுடைய தந்தை கலந்து கொண்டு இருவரையும் அழைத்துச் செல்வதால், இசை மற்றும் இசைக்கருவிகள் மீதான ஆர்வம் பிறந்தது, என்றார் விக்னேஸ்வரி.
“என் இரு மகன்களின் திறன்களை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களை மேலும் ஊக்கப்படுத்துவது மிக முக்கியம் என்று நான் கருதுகிறேன்.”
‘கவினோசொரஸ் தி டிரம்மிங் டினோ’ எனும் ஆங்கில சிறுவர் கதைப்புத்தகம் சீனம், மலாய் மற்றும் தமிழ் மொழிகளில் ஒரு புத்தக தொடராக்க விரும்புகிறார், விக்னேஸ்வரி. “இதனால், பல மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் பயனடைவார்கள் என்று நான் நம்புகிறேன்.”

