தேசிய தின அணிவகுப்பைத் தொடங்கிவைக்கும் மாணவர்கள்

2 mins read
0361ab18-40f5-4368-8ad8-4abe8b4c7929
தேசிய தின அணிவகுப்பின் தொடக்க அங்கத்தில் பங்குபெறும் சிறுவர்களுடன் தலைமை நடன இயக்குநர் ஏண்டி பெஞ்சமின் சாய் (பின்வரிசை நடுவில்). - படம்: ரவி சிங்காரம்

தேசிய தின அணிவகுப்பின் முதல் அங்கமாக சறுக்கு (skating), நடனம், சீருடற்பயிற்சி, பாடல், பறை என பலவற்றும் இணைந்த நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர் சிங்கப்பூர் மாணவர்கள்.

சிங்கப்பூரின் முக்கியச் சின்னங்களின் பிரம்மாண்ட உருவ பலூன்களின்கீழ் சில சிறுவர்கள் தேசியக் கொடியை அசைத்தபடி ஆரவாரத்துடன் நடந்துவருவதையும் நடனமாடுவதையும் மக்கள் காணலாம்.

சிங்கப்பூரின் ஆறு முக்கியச் சின்னங்களின் உருவ பலூன்களை மக்கள் காணலாம்.
சிங்கப்பூரின் ஆறு முக்கியச் சின்னங்களின் உருவ பலூன்களை மக்கள் காணலாம். - படம்: ரவி சிங்காரம்
உருவ பலூன்களின்கீழ் சிறுவர்கள் நடனமாடுவர்; நான்கு சக்கர வண்டியும் பலூன்களுக்கு முன்னே செல்லும்.
உருவ பலூன்களின்கீழ் சிறுவர்கள் நடனமாடுவர்; நான்கு சக்கர வண்டியும் பலூன்களுக்கு முன்னே செல்லும். - படம்: ரவி சிங்காரம்

அவர்களும் நான்கு சக்கர வண்டியில் அமர்ந்திருக்கும் சில அதிர்ஷ்டசாலிகளும் பாடாங்கை வலம்வந்து மக்களை மகிழ்விப்பர்.

சிங்கப்பூர்க் கனிவன்பு இயக்கத்தின் சின்னமும் கருணையின் அடையாளமுமான ‘சிங்கா’ சிங்க உருவ பலூனுடன் நடனமாடவுள்ள இளம் சிங்கங்களில் ஒருவர்தான் வெலர் தொடக்கப்பள்ளி மாணவி 10 வயது மைசாரா பிண்டி முகமது நிசார்.

‘சிங்கா’ சிங்கத்தின் உருவ பலூனுடன் வெலர் தொடக்கப்பள்ளி மாணவி 10 வயது மைசாரா பிண்டி முகமது நிசார்.
‘சிங்கா’ சிங்கத்தின் உருவ பலூனுடன் வெலர் தொடக்கப்பள்ளி மாணவி 10 வயது மைசாரா பிண்டி முகமது நிசார். - படம்: ரவி சிங்காரம்

‘மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்!’

தேசிய தின அணிவகுப்பிற்குத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பள்ளி நண்பர்கள் கூறியதும் மைசாரா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.

“இது மிகவும் நல்ல வாய்ப்பு. அதுவும் தேசிய தின அணிவகுப்பில் பங்குபெற எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. அதனால் பெருமகிழ்ச்சியடைந்தேன்.” என்றார் மைசாரா.

பிப்ரவரியில் பள்ளியில் தொடங்கிய அவரது பயிற்சிகள், பின்னர் கிராஞ்சி இராணுவ முகாமிலும் தற்போது பாடாங்கிலும் நடைபெற்றுவருகின்றன.

“சிலர் வண்டியில் அமர்ந்து செல்வர். ஆனால், நான் அங்கம் முழுவதும் நடனமாடுவதால் என் பங்கு சற்று வித்தியாசமானது.” என்றார் மைசாரா.

என் நண்பர்களின் ஊக்கம்தான் என்னைச் சோர்வடையாமல் பயிற்சிசெய்ய வழிநடத்தியது.
வெலர் தொடக்கப்பள்ளி மாணவி 10 வயது மைசாரா பிண்டி முகமது நிசார்.

பதற்றத்தை வெல்லும் தன்னம்பிக்கை

நாள் நெருங்க நெருங்க தேசிய தினத்தை எதிர்பார்த்து ஆர்வம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் ‘அனைவரது முன்னிலையிலும் நடனமாடும்போது ஏதேனும் மறந்துவிடுவேனா?’ என்ற பதற்றமும் அவருக்கு இருக்கிறது.

எனினும், “இது தேசிய தினம் அல்லவா? சிறப்பாகச் செய்வோம்!” என்ற தன்னம்பிக்கையுடன் அவர் பயிற்சி செய்கிறார். தேசியக் கல்வி (என்இ) காட்சிகளும் கூட்டத்திற்கு முன்னிலையில் நடனமாடும் பயிற்சியை அவருக்கு வழங்கியுள்ளன.

முதல் ‘என்இ’ காட்சியில் மைசாராவின் பெற்றோரும் அவரது நடனத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த அனுபவம் மூலம் மைசாராவுக்குப் பல புதிய நண்பர்களும் கிடைத்துள்ளனர்.

“நான் அவ்வப்போது பயிற்சியிடத்தைச் சுற்றி நடப்பேன். அப்போது உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொள்வேன். நாங்கள் ஒன்றாகப் பழகுவோம். அவர்களது ஊக்கம்தான் என்னைச் சோர்வடையாமல் பயிற்சிசெய்ய வழிநடத்துகிறது.” என்றார் மைசாரா.

தேசிய தினம் முடிவடைந்ததும் அனைவருக்கும் பிரியாவிடைக் கொடுப்பதைக் குறித்து வருந்தினாலும் அடுத்த ஆண்டு மீண்டும் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு இருக்கக்கூடும் என்பதில் மகிழ்ச்சியடைகிறார்.

தேசிய தின அணிவகுப்பில் நீங்கள் காணவுள்ள சின்னங்களை உங்களால் அடையாளம் காணமுடிகிறதா?

தேசிய தின அணிவகுப்பில் இடம்பெறவுள்ள ஆறு சின்னங்கள்.
தேசிய தின அணிவகுப்பில் இடம்பெறவுள்ள ஆறு சின்னங்கள். - படங்கள்: தேசிய தின அணிவகுப்பு, ஏக்டிவ்எஸ்ஜி, சமூக உண்டியல், தேசியச் சுற்றுப்புற அமைப்பு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, சிங்கப்பூர்க் கனிவன்பு இயக்கம்
குறிப்புச் சொற்கள்