என் நாட்டின் பிறந்தநாளை என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதுபோல ஆகஸ்ட் 9ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று ‘பாடாங்கில்’ மட்டுமன்றி, ‘என்டியுசி’யுடன் இணைந்து புரொமொன்டரி @ மரினா பேயிலும் கடலோரக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என்றும் பாடாங்கில் 27,000 பேர் திரள்வர் என்றும் இணையம் மூலம் தெரிந்துகொண்டேன். 2024ஆம் ஆண்டின் தேசிய தினக் கருப்பொருள் ‘ஒன்றாய், ஒன்றுபட்ட மக்களாய்’.
இந்த ஆண்டின் தேசிய தினப் பாடலை எழுதியவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?
‘என்றென்றும் ஒன்றாவோம்’ எனும் இவ்வாண்டின் தேசிய தினப் பாடலுக்குப் பெஞ்சமின் கெங் இசையமைத்துப் பாடியுள்ளார். சிங்கப்பூர் நதியை மையப்பொருளாகக் கொண்டுள்ளது இப்பாடல்.
பெஞ்சமின் கெங் முதலில் தேசிய நீச்சல் வீரராக இருந்தார். அவர் ஒலிம்பிக் வெற்றியாளர் ஜோசஃப் ஸ்கூலிங்கின் தோழர். ஆனால், பெஞ்சமினுக்கு நீச்சல் அடிப்பதைவிட இசையமைப்பது, பாடுவது என்றால் கொள்ளை ஆசை. அதனால், அவர் இப்போது பாடகராகத் திகழ்கிறார்.
இந்த ஆண்டு இந்தப் பாடலைப் பாடி தேசிய தினத்தைக் கொண்டாட நான் மிக ஆர்வத்துடன் இருக்கிறேன்.
மேலும், முதன்முறையாக 360 டிகிரி வாணவேடிக்கைகள் பாடாங்கில் பார்வையாளர்களுக்குப் பரவசமூட்டும் அனுபவங்களை வழங்கும். மரினா பே பகுதி, பாடாங், அடெல்ஃபி கட்டடம் ஆகியவற்றிலிருந்து வாணங்கள் வான் நோக்கிப் பாயும் என்று தெரிந்துகொண்டேன். நானும் வாய்ப்பிருந்தால் அந்த இடங்களில் ஏதேனும் ஓர் இடத்தில் இருந்து வாணவேடிக்கையைப் பார்த்து மகிழலாம் என்று இருக்கிறேன்.
சயந்திரிகா சாய் அரவிந்
தொடக்கநிலை 6, செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி

