சிங்கப்பூர் தனது 59வது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடிய மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறது.
‘ஒன்றாய், ஒன்றுபட்ட மக்களாய்’ என்ற அணிவகுப்பின் கருப்பொருளுக்கு இணங்க, பல்லின மக்களும் தேசிய தினப் பாடல்களைப் பாடி, உற்சாகத்துடன் கொண்டாட்ட உணர்வில் கலந்தனர்.
தொடக்கத்தில் குவீன்ஸ்வே, நேவல் பேஸ் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 220 மாணவர்களைக் கொண்ட வாய்ப்பாட்டுக் குழுவினர், ‘எங்கள் சிங்கப்பூர்’, ‘ராசா சாயாங்’, ‘சிங்கப்பூரா சன்னி ஐலண்ட்’ போன்ற நாட்டுப்பற்றுப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர்.
பார்வையாளர்களும் ‘தண்டர் ஸ்டிக்ஸ்’ எனும் பலூன் கோல்களைத் தட்டியபடி, உற்சாக ஆரவாரம் செய்து மகிழ்ச்சியுடன் பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.
இந்த ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்ற திரு லாரன்ஸ் வோங் மாலை 6.40 மணிக்கும் அதிபராக பொறுப்பேற்று இருக்கும் திரு தர்மன் சண்முகரத்னம் சரியாக 6.47 மணிக்கும் அரங்கத்தை வந்தடைந்து தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.