உடலில் பலமும் துடிப்பும் மிக்கவரான முகமது அயூப் சையது அப்துல் காதர், 42, நடத்தையில் கட்டுக்கோப்பு மிக்கவர்.
ராணுவத்தில் ‘மாஸ்டர் வாரண்ட்’ அதிகாரியாக உள்ள திரு அயூப், இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்.
தேசிய தின அணிவகுப்பில் ‘ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜராக’ பொறுப்பேற்று திரு அயூப் செயலாற்றினார்.
தேசிய தின அணிவகுப்புத் தளபதியுடன் இணைந்து நடத்தும் பொறுப்பு ‘ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர்’ ஆக உள்ள திரு அயூப்புக்கு உள்ளது.
பங்குபெறும் வீரர்களின் கட்டுக்கோப்பை நிலைநாட்டுவதுடன் சோதனைகள் நடத்தி ஒழுங்குமீறல்களைத் திருத்துவது அவரது பொறுப்பாகும்.
2001ல் சிங்கப்பூர் ஆயுதப் படைகளில் முழுநேரமாகச் சேர்ந்த திரு அயூப்புக்குப் படிப்படியாகப் பதவி உயர்வு கிடைத்தது.
அணிவகுப்புக்காக ஓராண்டு ஒத்திகை பார்த்த திரு அயூப், பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகக் கூறுகிறார்.
தேசிய தின அணிவகுப்பை திரு அயூப்பின் மனைவியும் மகனும் பார்வையாளர்களாக அமர்ந்து கொண்டாட்டத்தைக் கண்டுகளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
“என் அப்பாவின் கடப்பாட்டை நினைத்துப் பெருமைப்படுகிறேன். தேசிய அணிவகுப்புக்காக அவர் பயிற்சி செய்யும்போது வீட்டில் அதிகம் இருக்கமாட்டார். ஆயினும், அவர் கடுமையாகப் பயிற்சி செய்கிறார் என்பதை நினைக்கும் போது எனக்குப் பெருமையாக உள்ளது,” என்று அவரது மகன் முகம்மது அஷார், 13, மாணவர் முரசிடம் தெரிவித்தார்.
திரு அயூப்பும் தம் மகனின் தமிழ்த் திறனை நினைத்துப் பெருமைப்படுவதாகக் கூறினார்.
வீட்டில் எளிமையாய், பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்ததாக திரு அயூப் கூறினார். குடும்பத்தினர் தமிழ் பேசினாலும் அருகிலுள்ள தொடக்கப்பள்ளியில் தமிழ் மொழிப் பாடம் இல்லை என்பதால் பள்ளியில் மலாய் படித்து வளர்ந்தார் திரு அயூப்.
“தற்போது என் 13 வயது மகன் பள்ளியில் தமிழ்தான் படிக்கிறார்,” என்று பெருமிதத்துடன் கூறினார் அவர்.
மனைவி மக்களின் அன்பும் ஆதரவும் தமக்கு மேலும் வலுசேர்ப்பதாகக் கூறிய திரு அயூப், இயன்றவரை அவர்களுக்காக நேரம் ஒதுக்க விரும்புவதாகக் கூறினார்.