தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசரின் விபரீத ஆணையால் கலங்கிய நண்பர்கள்

2 mins read
ff88aba7-5196-4139-973b-3bd58d66a85c
பானைக்குள் யானை. - படம்: பட்டு

ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் சலவைத் தொழிலாளி. மற்றொருவர் மண் பானைகள் செய்யும் குயவர். இரண்டு பேருமே அரசரிடம் வேலை பார்த்து வந்தனர்.

ஒரு நாள் இரண்டு பேருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் குறைகளைத் தாங்களேத் தீர்த்துக்கொள்ளாமல் அரசரிடம் இருவரும் மாறி மாறிக் குறை கூறிக்கொண்டே இருந்தனர்.

மண் பானை செய்யும் குயவர், சலவைத் தொழிலாளியை அரசரிடம் வசமாக சிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி அரசரிடம், “அரசே, நமது பட்டத்து யானை கறுப்பாக இருக்கிறது. யானையைச் சலவைத் தொழிலாளியிடம் கொடுத்து வெளுக்கச் செய்யச் சொல்லுங்கள்,” என்றார்.

அரசர் மிகப் பெரிய முட்டாளாக இருந்தார். அவர் எதைப் பற்றியும் சிந்திக்காமல் சலவைத் தொழிலாளியைக் கூப்பிட்டு யானையை வெளுத்து வரும்படிக் கூறினார்.

உடனே, சலவைத் தொழிலாளி அரசரைப் பார்த்து, “அரசே, யானையை வெளுத்து விடலாம். யானையை வேக வைக்கும் அளவிற்கு பெரிய மண் பானை ஒன்றைக் குயவரை செய்து தரச் சொல்லுங்கள்,” என்றார்.

அரசர், குயவரைக் கூப்பிட்டு, “யானையை வேகவைக்கப் பெரிய பானையைச் செய்து கொடு,” என்று ஆணையிட்டார்.

குயவர் திரு திருவென விழித்தார்.

இறுதியில் இருவரும் சந்தித்து, “உன்மீது நானும் என்மீது நீயும் குறை கூறி மாட்டிக்கொண்டோம். இதனால், நம் இருவருக்குமே வேலை பார்ப்பதில் துன்பம். இனிமேல் இதுபோல நடக்கக் கூடாது. நம் தவறுகளை நாம் திருத்திக் கொள்வோம். எப்போதும் நல்ல நண்பர்களாய் இருப்போம்,” என்று இருவரும் கூட்டாக அரசரிடம் சென்று மன்னிப்பு கேட்டனர்.

அன்று முதல் இருவரும் இணைபிரியா நண்பர்கள் ஆனார்கள்.

இவர்களைப்போல பள்ளியில் நண்பர்களுக்குள் சில சமயம் கோபம் ஏற்படலாம். இருவரும் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து பேசிப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதைவிட்டு மற்றவர்களிடம் சென்று புகார் செய்தால் அது பெரிய பிரச்சினையாகிவிடும் என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

குறிப்புச் சொற்கள்