2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளின் அலையாடல் (Kitefoiling) போட்டியில் வெண்கலம் வென்ற 17 வயது மேக்சிமிலியன் (மேக்ஸ்) மெய்டர் பேருந்தில் பல இடங்களுக்குச் சென்றார்.
அவர் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற ஆறாவது மற்றும் ஆக இளைய சிங்கப்பூரராக வரலாற்றில் தடம்பதித்துள்ளார்.
பேருந்தில் மேக்ஸ் மெய்டருடன், பூப்பந்து வீரர்கள் இயோ ஜியா மின், டெரி ஹீ, ஜெசிக்கா டான், நீச்சல் வீரர்கள் கான் சிங் ஹுவீ, படகு வலித்தல் வீரங்கனை ஸ்டெஃபனி சென், படகோட்ட வீரர் ராயன் லோ, ஓட்டப் பந்தய வீரர் மார்க் லுயிஸ், மேசைப் பந்து வீரர்கள் ஐசேக் குவேக், சோ ஜிங்யி ஆகியோரும் இருந்தனர்.
அவர்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலத்தைத் தொடங்கிவைத்தனர் கலாசார, சமூக, இளையர் அமைச்சர் எட்வின் டோங் மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ.
சிங்கப்பூரின் முக்கிய மையங்களுக்குச் சென்ற பேருந்து
சிவப்பு நிறத் திறந்தவெளிப் பேருந்து, பத்து ‘டீம் சிங்கப்பூர்’ வீரர்கள், வீராங்கனைகளோடு காலை சுமார் 11.30 மணி அளவில் காலாங்கில் உள்ள சிங்கப்பூர் விளையாட்டு மையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.
பேஃபிரண்ட் அவென்யூ, சைனாடவுன், ஆர்ச்சர்ட் சாலை, சிராங்கூன் சாலை, விக்டோரியா சாலை வழியாகப் பேருந்து ஊர்வலம் சென்றது.
மக்கள் பலரும், விளையாட்டாளர்களை வாழ்த்தும் பதாகைகளைக் கைகளில் ஏந்தியிருந்தனர். அவற்றைக் கண்ட விளையாட்டாளர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி!
பூரிப்படைந்த விளையாட்டு வீரர்கள்
“என் மகிழ்ச்சியைக் கூற வார்த்தைகள் இல்லை. இத்தனைப் பேர் எங்களைப் பாராட்ட வருவார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. அனைவருக்கும் மிக்க நன்றி. சமூகத்தில் ஒரு பெரிய நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மனநிறைவை இது எனக்கு அளிக்கிறது. நான் கை காண்பிக்கும்போது மக்கள் மகிழ்வதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.” என்றார் மேக்ஸ்.
‘என்ன நேர்ந்தாலும் முயற்சியைக் கைவிடாதே!’, ‘தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி என்றுமே சாத்தியம்!’ போன்ற பதாகைகள் தன் கவனத்தை ஈர்த்ததாகவும் கூறினார் மேக்ஸ்.
அலையாடலில் சாதிக்க விரும்பும் சிறார்களுக்கு மேக்சின் அறிவுரை
“பொறுமையாக இருங்கள்; எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அலையாடலைத் தொடங்குங்கள். அதன்மூலம் உங்களால் கூடுதலாக அலையாடல் பயிற்சி பெறமுடியும்.” என்றார் மேக்ஸ்.
பலருக்கும் மேக்ஸ் ஒரு நல்ல முன்னுதாரணம்
தன் வெற்றியால் மட்டுமல்ல, தன்னடக்கத்தாலும் மேக்ஸ் மக்களைக் கவர்ந்தார்.
ஊர்வலம் நிறைவடைந்து உணவு உண்ண சென்ற மேக்ஸ், தன்னுடன் புகைப்படம் எடுக்க செயின்ட் ஜோசஃப் நிலைய மாணவர்கள் கோரிக்கை விடுத்ததாக அறிந்ததும் உடனே உண்பதை நிறுத்திவிட்டு, வெளியே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், பலருக்கும் வாழ்த்துகளும் கையொப்பங்களையும் வழங்கி ரசிகர்களின் முகங்களில் புன்னகையை வரவழைத்தார்.
தன் குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் மேக்ஸ் நல்லுறவு வைத்துள்ளதாகவும் கூறிய மேக்ஸ், தன் வெற்றிக்குத் தன் குடும்பத்தினரும் சிங்கப்பூரர்களும் ஆதரவளித்ததை மறக்கவில்லை.
உங்களுக்குத் தெரியுமா?
இதற்கு முந்தைய திறந்தவெளிப் பேருந்து ஒலிம்பிக் ஊர்வலம், 2016ல் சிங்கப்பூரின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஜோசஃப் ஸ்கூலிங் வென்றபோது நடந்தது.
ஆனால், அந்த முறை ஸ்கூலிங் மட்டும்தான் ஊர்வலம் வந்தார். இம்முறை, ‘ஒலிம்பிக் மேடையில் சிறப்பாகச் செய்ததே வெற்றி’ என்ற நிலையில் மேக்ஸ் மெய்டருடன் மற்ற ‘டீம் சிங்கப்பூர்’ விளையாட்டாளர்களும் ஊர்வலத்தில் பங்குபெற்றனர்.