அன்பை வெளிப்படுத்தினால் உலகம் நம் வசமாகும்

அன்பை வெளிப்படுத்தினால் உலகம் நம் வசமாகும்

2 mins read
b6ce01a3-df8b-446a-a5c8-7810dc07f98e
அன்பை வெளிக்காட்டும் சிறுமி. - படம்: ஊடகம்

ஆசிரியர் கோமதி வகுப்பிற்குள் நுழைந்தார். அதுவரை சத்தமாகப் பேசிக்கொண்டு இருந்த மாணவர்கள் அமைதியானார்கள்.

ஆசிரியர், “இன்று உங்களுக்கு அன்பு பற்றிய பாடத்தை நடத்தப் போகிறேன்,” என்றார்.

மாணவர்களும் பாடத்தைக் கவனிக்கத் தயாரானார்கள்.

ஆசிரியர் கோமதி மாணர்களைப் பார்த்து, உங்களில் நான்கு பேர் இங்கு வாருங்கள் என்று கூறினார்.

உடனே கவிதா, கலா, இஸ்மாயில், கந்தன் எழுந்து வந்தனர்.

“அன்பை வெளிப்படுத்தும் எதையாவது வெளியில் இருந்து கொண்டுவாருங்கள் என்று மாணவர்களை வகுப்பிலிருந்து வெளியே அனுப்பினார்.

வெளியே சென்ற மாணவர்கள் சிறிது நேரத்தில் வகுப்பிற்குள் நுழைந்தனர். கவிதாவின் கையில் மலர் இருந்தது. கலாவின் கையில் வண்ணத்துப்பூச்சி இருந்தது. இஸ்மாயில் கையில் ஒரு குஞ்சுப் பறவை இருந்தது.

இறுதியாக வகுப்பிற்குள் நுழைந்த கந்தன் வெறும் கையுடன் திரும்பினான்.

ஆசிரியர் நீ ஏன் ஒன்றும் கொண்டு வரவில்லை என்று கேட்டதற்கு, “நான் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாகப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன். குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். இரை தேடச் சென்ற தாய் பறவை திரும்ப வந்து தேடும் என்று விட்டுவிட்டேன் . வேறு ஒன்றும் என் கண்ணில் படவில்லை ஆசிரியர்,” என்றான்.

உடனே ஆசிரியர் கந்தனைப் பாராட்டி, “அன்பு என்றால் இதுதான்,” என்றார்.

உங்களால் உலகிற்கு எதையேனும் இலவசமாகக் கொடுக்க முடியும் என்று நினைத்தால் அன்பைக் கொடுங்கள். ஏனெனில் உலகம் அதற்குத்தான் அதிகமாக ஏங்கிக் கிடக்கின்றது. அன்பு எல்லோரிடமும் இருக்கிறது. கொஞ்சம் மனதைக் கட்டுப்படுத்தி அன்பைக் காட்ட ஆரம்பித்தோமானால் உலகம் நம் வசப்படும்.

குறிப்புச் சொற்கள்