தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் ஆர்வத்தை வளர்த்த இசைநிகழ்ச்சி

3 mins read
2ac43b85-68e5-42ba-8f0d-40c2c2da0bbb
‘ஒரு கதை சொல்லவா?’ நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவினரும் நடிகர்களும். - படம்: சேதுராமன் ஸ்ரீனிவாசன்

சிறார்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் தமிழ் கதைகளின் மூலம் மந்திரமயமான உலகிற்குள் அழைத்துச் சென்றது ‘ஒரு கதை சொல்லவா?’ இசைநிகழ்ச்சி.

தமிழ் இளையர் விழாவின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி, தத் த்வம் அசி இசைப்பள்ளியின் ஏற்பாட்டில் ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ கட்டடத்தின் ‘ப்லேடென்’ அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) இருமுறை நடந்தேறியது.

தாத்தா சொல்லும் கதைகளைக் கேட்க ஆர்வமுடன் இருக்கும் ‘குட்டி கவிதா’ என்ற சிறுமியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சி, பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதில், தாத்தா ஒருநாள் கவிதாவிடம் சொன்ன கதைகளின் கதாபாத்திரங்கள் உயிரோட்டத்துடன் மேடையில் தோன்றின.

நிகழ்ச்சியின் மையக் கதாபாத்திரமான ‘குட்டி கவிதா’.
நிகழ்ச்சியின் மையக் கதாபாத்திரமான ‘குட்டி கவிதா’. - படம்: சேதுராமன் ஸ்ரீனிவாசன்

ஐந்து நடிகர்கள் இணைந்து இரு கதைகளை மேடையேற்றினர்.

முதல் கதை பொறுமையின் சிறப்பை எடுத்துக்காட்டியது. பலரின் சந்தேகங்களுக்கு மத்தியிலும், ஒரு தாய் வாத்து பொறுமையுடனும், அன்போடும் தன் குஞ்சுகளைப் பாதுகாத்து வளர்த்தது பற்றிய கதை அது.

பொறுமையின் சிறப்பை எடுத்துக்காட்டிய வாத்துக் குடும்பத்தைப் பற்றிய கதை.
பொறுமையின் சிறப்பை எடுத்துக்காட்டிய வாத்துக் குடும்பத்தைப் பற்றிய கதை. - படம்: சேதுராமன் ஸ்ரீனிவாசன்

இரண்டாவது கதை ஞானத்தின் சக்தியை வெளிப்படுத்தியது. ஓர் அரசவையில் நடக்கும் அந்தக் கதையானது, அறிவும் புத்திக்கூர்மையும் வாளைவிட ஆற்றல்மிக்கது என எடுத்துரைத்தது.

ஞானத்தின் சக்தியை வெளிப்படுத்திய ராஜா ராணி கதை.
ஞானத்தின் சக்தியை வெளிப்படுத்திய ராஜா ராணி கதை. - படம்: சேதுராமன் ஸ்ரீனிவாசன்

நிகழ்ச்சியின் நடுவே, ஐந்து முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மேடைக்கு அழைக்கப்பட்டு, புதிர்களைத் தீர்க்கவும், கதாபாத்திரங்களுக்கு உதவவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

“இது முழுமையான அனுபவமாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம்,” என்று இசைப்பள்ளியின் இயக்குநர் லாவண்யா சம்பத் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

குழந்தைகள் பார்வையாளர்களாக மட்டுமன்றி, கதைகளின் ஒரு பகுதியாக நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்கும்போது தமிழை இயல்பான முறையில் அவர்கள் கற்றுக்கொள்வர் என நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறுவர்கள் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது.
சிறுவர்கள் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. - படம்: சேதுராமன் ஸ்ரீனிவாசன்

இந்நிகழ்ச்சிக்காகவே தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட இசை, வண்ணமயமான ஆடைகள், பல்லூடக அம்சங்கள் முதலியவற்றை ஒருங்கிணைத்த இந்தப் படைப்பில், மகூலம் கலைக்கூடத்தைச் சேர்ந்த இளம் நடனமணிகள் நடனமாடினர்.

நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான துணைக்கருவிகளும் அலங்காரங்களும் தயாரிப்புக் குழுவினரால் சொந்தமாக உருவாக்கப்பட்டவை. சிம்மாசனம் போன்ற அலங்காரங்களுக்கு அட்டைத்தாளைப் பயன்படுத்தியதாகவும், ஆடைகள் மீண்டும் பயன்படுத்தப்பட்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்டதாகவும் திருவாட்டி லாவண்யா தெரிவித்தார்.

ஆக்கப்பூர்வமான கலைப்படைப்புகளுக்குப் பெரிய அளவில் செலவு செய்யத் தேவையில்லை என்பதை இந்நிகழ்ச்சி குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் என ஏற்பாட்டாளர்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

தத் த்வம் அசி இசைப்பள்ளியின் இயக்குநர் லாவண்யா சம்பத்.
தத் த்வம் அசி இசைப்பள்ளியின் இயக்குநர் லாவண்யா சம்பத். - படம்: சேதுராமன் ஸ்ரீனிவாசன்

“குழந்தைகள் வீட்டிற்குச் சென்று, நிகழ்ச்சியில் கேட்ட சில தமிழ்ச் சொற்களின் பொருள் அல்லது அவர்கள் சந்தித்த கதாபாத்திரங்களைப் பற்றி பெற்றோரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்றார் அவர்.

பார்வையாளர்களில் ஒருவரான 10 வயது அஞ்சனா ஸ்ரீ கணேஷ், நிகழ்ச்சியில் ‘குட்டி கவிதா’ கதாபாத்திரத்தில் நடித்த தன் தாயார் திருவாட்டி ஷெரீன் ஜீவிதா ஜோசப்பை மேடையில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அளித்ததாக கூறினார்.

“நிகழ்ச்சியில், ராஜா ராணி கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ‘ஹாரி பாட்டர்’ போன்ற ஆங்கில புத்தகங்களையே அதிகம் படிப்பேன். ஆனால், இப்போது தமிழ் புத்தகங்களையும் படிக்க ஆர்வம் வந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

பார்வையாளர்களில் ஒருவரான 10 வயது அஞ்சனா ஸ்ரீ கண‌ஷும் அவரது தந்தை திரு ஸ்ரீ கணே‌‌ஷும்.
பார்வையாளர்களில் ஒருவரான 10 வயது அஞ்சனா ஸ்ரீ கண‌ஷும் அவரது தந்தை திரு ஸ்ரீ கணே‌‌ஷும். - படம்: யோகிதா அன்புச்செழியன்

இன்றைய குழந்தைகள் தொலைக்காட்சி, ‘யூடியூப்’ போன்ற ஊடகங்களுக்குப் பழகிவிட்டதாக குறிப்பிட்ட அஞ்சனாவின் தந்தை திரு ஸ்ரீ கணே‌ஷ், இந்த நிகழ்ச்சியில் அவர்கள் நேரடியாகக் கதையுடன் தொடர்புகொண்ட தருணங்கள் தமிழ் மொழியை அணுகுவதற்கு எளிமையான வழியாக அமைந்ததாகக் கூறினார்.

“இன்று, பல வீடுகளில் தமிழ் பயன்பாடு குறைந்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்ச்சிகள் மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகின்றன,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்