தான் சந்தித்த இன்னல்களையே பாதையாக்கி, கடந்து வந்த மனநலம் சார்ந்த இடர்களைப் பலமாக்கி இன்று உளவியல் துறையில் சிறந்து ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார் தாரினி ராகவன் நாயர், 23.
பள்ளிப் பருவத்தில் சக மாணவர்களின் கேலி கிண்டல்களாலும் கண்டறியப்படாத பதற்றத்தாலும் அவதியுற்ற தாரினி, இன்று உளவியல் துறை சார்ந்த பட்டப் படிப்பில் சிறந்து விளங்கி, சிங்கப்பூர் உளவியல் சங்கத்தின் முன்மாதிரி கப்லான் உளவியல் மாணவி விருதைப் பெற்றுள்ளார்.
நண்பர்களின்றி, பயந்த குணத்தோடு, சக மாணவர்களின் துன்புறுத்தலை அனுபவித்த தாரினிக்கு, கல்வி மட்டுமே வாழ்க்கைக்குக் கைகொடுக்கும் என்ற மனநிலை உருவாகியது.
நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதைத் தன் தாரக மந்திரமாகக் கொண்டு, உயர்நிலை ஒன்றில் ஓய்வின்றி தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
தேர்வுகளில் உறுதியாக நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற இலக்கு, அச்சமாக மாற, ஒவ்வொரு தேர்வையும் மிகுந்த பதற்றத்துடன் எழுதினார் இவர்.
அப்படி ஒருமுறை, தேர்வின்போது தலைசுற்றல் ஏற்பட்டு, தேர்வு எழுத முடியாமல் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இவ்வாறு பெரும் பதற்றத்தால் அவதிப்படும் சூழ்நிலைகளிலிருந்து தப்பிக்க எண்ணி, தேர்வுகள் நடைபெறும்போது பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்தார் தாரினி.
இந்த இக்கட்டான சூழலில், அவரது வாழ்வின் ஒளிவிளக்காய்த் திகழ்ந்தார் பள்ளியின் மனநல ஆலோசகர் குமாரி நித்யா.
தொடர்புடைய செய்திகள்
“முதன்முறையாக நான் மனம் விட்டுப் பேசியது குமாரி நித்யாவிடம்தான்,” என்றார் தாரினி.
“என்னைப் பற்றி எந்த முன்முடிவுக்கும் வராமல், என் எண்ணங்களை முழுமையாகக் கேட்டறிந்து, என்ன சிக்கல் என்பதைப் புரியவைத்து, அதிலிருந்து மீண்டு வருவதற்கான தீர்வுகளையும் அவர் பரிந்துரைத்தார்,” என்று தாரினி விளக்கினார்.
தாரினி யாரையும் ஏமாற்றவில்லை என்ற தெளிவை கொடுத்ததோடு, அவர் சுதந்திரமாகச் செயல்படத் தேவையான வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்து, மனநலச் சிக்கல்களிலிருந்து விடுபட குமாரி நித்யா பெரும்பங்காற்றினார்.
உளவியல் துறையில் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடனும் மனநலச் சிக்கல்களைக் கையாள முடியாமல் தடுமாறுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்குடனும் தன்னம்பிக்கையோடு மீண்டு வந்தார் தாரினி.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் சிறந்த தேர்ச்சி பெற்று, 2020ஆம் ஆண்டு இயக்குநரின் கௌரவ பட்டியலில் அவர் இடம்பெற்றார். அத்துடன், 2021, 2022ஆம் ஆண்டுகளில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாரினிக்கு உபகாரச் சம்பளமும் கிடைத்தது.
இன்று கப்லான் சிங்கப்பூர் (Kaplan Singapore) மூலம் மர்டோக் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை பட்டப்படிப்பின் இறுதி ஆண்டைப் பயில்கிறார் தாரினி.
குறிப்பாக, தேர்வு நேரங்களில் மற்ற மாணவர்களின் மனநலத்தைப் பேணுவதற்கான முயற்சிகளை எடுப்பது, சிங்கப்பூர் உளவியல் கப்லான் வழிகாட்டல் திட்டமிடல் குழுவின் உறுப்பினராக மாத உரைகளை நடத்துவது, முன்னணி உளவியலாளர்களோடு மாணவர்களை ஒன்றிணைப்பது எனப் பல நடவடிக்கைகளில் தாரினி ஈடுபட்டு வருகிறார்.
தன் சமூகப் பங்களிப்புகளுக்காகவும் சிறந்த கல்வி தேர்ச்சிக்காகவும் இவ்வாண்டு சிங்கப்பூர் உளவியல் சங்கத்தின் சிறந்த கப்லான் உளவியல் மாணவி விருதைப் பெற்றுள்ள இவர், வருங்காலத்தில் ஒரு மருத்துவ உளவியலாளராகத் தன் சொந்த மருத்துவமனையைத் தொடங்க விழைகிறார்.
நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வசதிகுறைந்தோருக்கும் தங்கள் மனநலம் பேணுவதற்கான வசதிகள் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, குறைவான கட்டணத்தில் மனநலச் சேவை வழங்க இவர் முற்படுகிறார்.
“சிங்கப்பூரில் மனநல ஆலோசகரிடம் சென்றால், ஒரு மணி நேரத்திற்கு ஏறத்தாழ $120 வாங்குகிறார்கள். அவ்வளவு பணம் கொடுத்து உதவி நாட துன்பத்தில் வாடிக்கொண்டிருப்பவர்களுக்கு மனம் ஒப்பாது,” என்கிறார் தாரினி.
அமைதியின்றி வாடிக்கொண்டிருக்கும் பலரும் தக்க உதவியை நாட வேண்டும் என்றும் இவர் அறிவுறுத்தினார்.
இளையர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான பலங்களைக் கண்டறிந்து, தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும் என்பதே தாரினியின் கோரிக்கை.

