ஏழு வயது ஷர்வின், கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பில் பயிலத் தொடங்கியதில் பெருமை அடைவதாக அவரது தாயாரான 33 வயது சந்தியா மோகன் கூறினார்.
செம்பவாங் தொடக்கப் பள்ளியில் சேர்ந்துள்ளார் ஷர்வின். தானாகவே பையை எடுத்து, பாடப் புத்தகங்களை அடுக்கித் தயார் செய்து, மறக்காமல் அவற்றை வீட்டுக்கு மீண்டும் கொண்டுவர அவர் சிறிது காலமாகவே பழகிக் கொண்டார்.
“என் மகன் மெதுவாகச் சாப்பிடுபவர். எனவே பள்ளி இடைவேளை நேரத்தில் அவர் நேரத்திற்குள் சாப்பிடவும் பழகுகிறார்,” என்று தாயார் சந்தியா கூறினார்.
அமைதியான குணமுள்ள ஷர்வின், தனக்கு நன்கு தெரிந்தவர்களுடன் சிரித்துப் பேசிப் பழகுவார். காற்பந்து போன்ற விளையாட்டுகளில் உற்சாகமாக ஈடுபடும் அவர் திறன்பேசிகளை அதிகம் நாடுவதில்லை.
கடந்த ஆண்டு நடப்புக்கு வந்த திறன்பேசிகளுக்கான கட்டுப்பாடு மிக நல்லது என்று ஷர்வினின் தாயார் கூறுகிறார். “மற்ற பிள்ளைகளுடன் பழகி, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நல்ல அனுபவங்களைப் பெறுவது பிள்ளைப் பருவத்திற்கு முக்கியம்,” என்றார் அவர்.
ஷர்வினைப்போல இஜாஸ் அலியும் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பில் புதிதாகச் சேர்ந்தார்.
சக மாணவர்களுடன் தனது மகன் எப்படிப் பழகுவார் என்று நினைத்துத் தொடக்கத்தில் அஞ்சியதாக 34 வயது நஸ்ரின் தெரிவித்தார்.
“ஆனால் எல்லாம் நன்றாகவே நடந்தது. என் மகன் புதிய மாணவர்களுடன் பழகி, மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
படிப்படியாக அறிமுகம் காணும் தாய்மொழி வாசிப்புத் திட்டம்
மாணவர்கள் தாய்மொழியில் நூல் வாசிப்பதற்கு வாரத்திற்கு ஒருமுறை அரைமணி நேரம் ஒதுக்கப்படும்.
இதனால் தங்கள் பிள்ளைகள் பயன்பெறுவதை எண்ணி பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
பாலர் பள்ளிப் பருவம் முதற்கொண்டு வீட்டில் வாசிக்க எஸ். குமரனுக்கு அவருடைய தாயார் எஸ். பாரதி மிகுந்த ஊக்கமளித்து வருகிறார். கான்கார்டு தொடக்கப்பள்ளியில் சேர்ந்துள்ள குமரன், பள்ளிக்கு ஆர்வத்துடன் சென்று வந்ததாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
“அன்றாடம் என் பிள்ளைகள் புத்தகம் படிப்பார்கள். புத்தகம் படிக்கும் பழக்கம் எல்லாப் பிள்ளைகளுக்கும் அவசியம். பேச்சுத் தமிழுடன் எழுத்துத் தமிழையும் பழகுவது முக்கியம்,” என்று வங்கி நிர்வாகியாகப் பணிபுரியும் திருவாட்டி பாரதி கூறினார்.
திருவாட்டி திலகா, தன் மகள் அவந்திகா பாண்டியராஜனை முதன்முதலாகத் தொடக்கப்பள்ளிக்கு அனுப்பிய மகிழ்ச்சியில் இருக்கிறார்.
“என் மகள் சொந்தமாக உணவு வாங்குகிறாள். புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைக்கிறாள். இது மனத்திற்கு நிறைவளிக்கிறது,” என்று அவர் கூறினார்.
மற்ற பெற்றோரைப்போலவே திறன்பேசிகளைத் தவிர்த்து தன் மகள் மற்ற பிள்ளைகளுடன் நேரடியாகப் பழகி விளையாடவேண்டும் என்றே திருவாட்டி திலகாவும் விரும்புகிறார்.

