மாணவர்களின் கற்றல் பயணம்

4 mins read
6b0a8bbe-70de-442f-89e8-70ca3c3d3c35
தொடக்கநிலை மாணவர்கள் போலி@கிளைவ் ஸ்த்ரீட்டில் கட்டப்பட்டிருந்த மாடுகளைப் பற்றித் தெரிந்துகொண்டனர். - படம்: ரவி சிங்காரம்

பொங்கல் பண்டிகை முடிந்துவிட்டாலும் இன்னும் பொங்கல் நினைவுகளிலிருந்து மீளாமல் மனதில் வைத்திருக்கும் சிறார்களே! சென்ற வாரம் பொங்கலுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? 

வீட்டில் பொங்கல் வைத்து “பொங்கலோ! பொங்கல்!” என குடும்பமாக நிச்சயம் கூவிக் கொண்டாடியிருப்பீர்கள்!

உங்களில் பலரும் போலி@கிளைவ் ஸ்த்ரீட்டுக்குச் சென்றும் பொங்கல் மாடுகளையும் நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்திருப்பீர்கள்.

பொங்கல் வாரம் முழுவதும் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் போலி@கிளைவ் ஸ்த்ரீட்டுக்கும் இந்திய மரபுடைமை நிலையத்துக்கும் கற்றல் பயணங்களுக்கு அழைத்துச் சென்றனர். 

போலி@கிளைவ் ஸ்த்ரீட்டில் லி‌‌‌ஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர், மரபுடைமை சங்கம் மாணவர்களுக்காகப் பல பொங்கல் நடவடிக்கைகளையும் அன்றாடம் பிற்பகல் 2 முதல் 5 மணி வரை (பள்ளி முடிந்தபின்) ஏற்பாடு செய்திருந்தது. அவற்றுக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் உதவினர்.

ஜனவரி 13 முதல் 17ஆம் தேதி வரை ஐந்து நாள்களில் அன்றாடம் எட்டு பள்ளிகளிலிருந்து மாணவர்கள் போலி@கிளைவ் ஸ்த்ரீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மொத்தம் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

அங்கு மாடுகளோடு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த மாணவர்களுக்கு, பின்பு ‘கரகம் துர்கா இவென்ட்ஸ்’ நிறுவனத்திலிருந்து கலைஞர்கள் இந்தியப் பாரம்பரியக் கலைகள் பற்றி சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்தனர்.

கலைஞர்கள் கரகாட்டம், பொய்க்கால் ஆட்டம், சிலம்பாட்டம் போன்றவற்றை ஆடியதோடு தவில், நாதசுவரம் போன்ற வாத்தியங்களை வாசித்தும் மாணவர்களைப் பரவசப்படுத்தினர்.

ஒவ்வொரு மாணவரும் கரகத்தைத் தம் தலையில் தாங்கி, அதை விழாமல் பார்த்துக்கொள்ள முயன்றனர். பலருக்கும் அது மிகக் கடினமாக இருந்தது!

பறை, தவில் போன்ற வாத்தியங்களை வாசிக்கவும், மயிலாட்ட உடைகளை அணியவும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. உறியடித்தல், சிலம்பாட்டம் போன்றவற்றிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.

காலாவதித் தினத்தை நெருங்கும் உணவுகளுக்கு மறு உயிர் அளிக்கும் ‘மோனோ.எஸ்ஜி’ சமூக நிறுவனம், மாணவர்களுக்கு பானங்களையும் வழங்கியது.

சிண்டா சாவடியிலும் மாணவர்கள் சுவாரசியமான விளையாட்டுகள் விளையாடினர்.

தம் பள்ளியிலிருந்து உயர்நிலை ஒன்று மாணவர்களை அழைத்துவந்திருந்த சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் திருமதி மோகனவள்ளி, திருமதி சித்ரா முருகன், “மாணவர்களுக்கு வகுப்பறையைத் தாண்டியும் கற்றல் தேவை. தொடக்கநிலையிலிருந்து உயர்நிலைக்குச் செல்லும் மாணவர்கள் பாரம்பரியத்தைப் பற்றிய கூடுதல் புரிந்துணர்வைப் பெறுவதற்கும் பேச்சு, எழுத்துத் திறனை மேம்படுத்துவதற்கும் இது நல்ல தளமாக அமைகிறது,” என்றனர். 

தம் பள்ளியிலும் பிப்ரவரி 3ஆம் தேதி பொங்கல் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்துள்ளதாகவும், சமூகத்தோடு இணைந்து பொங்கல் கொண்டாட புக்கிட் பாஞ்சாங் பொங்கல் நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்குபெறுவதாகவும் அவர்கள் கூறினர்.

மழையையும் பொருட்படுத்தாமல் பொங்கல் நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் கலந்துகொண்ட மாணவர்களைப் பெரிதும் பாராட்டவேண்டும்!

கரகாட்டம் என்றால் என்ன?

கரகம் என்பது இருவகைப்படும். ஒன்று சக்திக் கரகம், மற்றொன்று ஆட்டக் கரகம். “கரகாட்டம் என்பது பல நூறு வருடங்களாக நடந்துவருவது. கோவில் திருவிழாக்களில் சுவாமி புறப்படும்போது பானையில் தண்ணீர் நிரப்பி, மேலே தேங்காய் வைத்துக் கும்ப ஆட்டமாக இருந்தது. நாளடைவில் அது சக்திக் கரகம் என பெயர்கொண்டது. பின்பு ஆட்டக்கரகமாக மாறியது. 

“மக்களை மகிழ்விப்பதற்காக ஆடுவதே ஆட்டக்கரகம். தலையிலிருந்து விழாமலிருக்க பித்தளைச் சொம்பினில் நாங்கள் அரிசியை இட்டு, ஒரே மனநிலையில் ஆடுவோம். சொம்பின்மீது, பூக்கள் வைத்து, அதன்மீது மதுரை மீனாட்சியம்மனின் கிளியை வைத்து அலங்கரிப்போம். நெருப்பு, ஊசியை வைத்து போத்தலில் ஏறுவது போன்ற கலை நுணுக்கங்களையும் கொண்டுவருவோம்,” என்றார் கின்னஸ் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள கரகம் துர்கா.

இசைக்கருவிகளின் பின்னணி

தவில் எனும் தோல்கருவியின் ஒருபுறம் ‘தொப்பி’ என்றழைக்கப்படுகிறது. ஆட்டுத் தோலால் செய்யப்பட்டது. அதன் மறுபுறம் வலந்தரை மாட்டுத் தோலால் தயாரிக்கப்பட்டது. தவிலைத் தயாரிக்க பலாமரமும் தேவைப்படுகிறது. 

“சுப நிகழ்ச்சிகள், கோவிலில் எந்த நிகழ்ச்சியிலும் முதலில் வாசிக்கப்படுவது நாதசுவரம் மட்டுமே. இதைச் செய்யப் பயன்படும் ஆச்சாமரம், இலங்கையில் மட்டுமே கிடைக்கும். அதன் ஒரு பகுதி பலாமரத்தினாலும் செய்யப்படுகிறது,” என்றார் திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த நாதசுவரக் கலைஞர் அ‌ஷோக் குமார். அவர் மாணவர்களுக்கு நாதசுவரத்தை வாசித்துக் காட்டினார்.

“எனக்குக் கரகாட்டம் பிடித்திருந்தது. நான் முன்பு தஞ்சாவூர் சென்றபோதும் இதைப் பற்றிக் கற்றுள்ளேன். மற்ற பாரம்பரிய நடனங்களும் என்னைக் கவர்ந்தன.” - ஹனந்தீன், 11, ஜுன்யுவான் தொடக்கப்பள்ளி.

“அருமையாக இருந்தது. கரகத்தைத் தலையில் வைக்கக் கற்றுக்கொண்டேன். கேள்வி பதில் புதிர்மூலமும் நிறைய கற்றேன். தவில் வாசித்தேன்.” - மகந்த் ராஜ்குமார், 10, செயின்ட் ஸ்டீஃபன்ஸ் பள்ளி

“சென்ற ஆண்டும் அதற்கு முன்பும் நான் இங்கு வந்துள்ளேன். இந்தியாவில் என் சொந்த ஊர் கரையப்பட்டி. அங்கு மாடுகளுக்கு இதுபோன்ற வண்ணம் பூசமாட்டார்கள். ஆனால், அங்கு சாலையிலேயே மாடு சுற்றித் திரியும். இந்தியாவில் கொண்டாடும் அளவிற்குப் பொங்கலை என் குடும்பம் சிங்கப்பூரில் கொண்டாடுவதில்லை.” - ராகவ், 10, ஓப்ரா எஸ்டேட் தொடக்கப்பள்ளி.

“பொங்கல் தினத்தன்று நாங்கள் இரண்டு பானைகளில் பொங்கல் வைத்தோம். நான் காலையில் பள்ளிக்குச் சென்றதால், மாலையிலேயே பொங்கல் வைத்தோம். பால் பொங்கும்போது “பொங்கலோ பொங்கல்!” என கூவினோம். எங்கள் பாட்டி இரண்டு தட்டுகளைத் தட்டி ஓசை எழுப்பினார்.” - ‌ ‌ஸ்ரீசாம்பவி, 10, ஓப்ரா எஸ்டேட் தொடக்கப்பள்ளி.

“பொங்கல் எதற்குக் கொண்டாடுகிறோம் எனக் கற்றேன். போகி தினத்தன்று பழைய துணிகளைத் தூக்கிப் போடுவோம். தைப்பொங்கலன்று சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்வோம். மாட்டுப் பொங்கலன்று அன்றாடம் வயலை உழும் மாட்டுக்கு ஓய்வு வழங்கிக் கொண்டாடுவோம். காணும் பொங்கலன்று பெரியவர்களுக்கு மரியாதை செய்வோம். பொங்கல் தினத்தன்று தாத்தா பாட்டியிடம் தொலைபேசியில் வீடியோ அழைப்பில் பால் பொங்குவதைக் காட்டினேன்.” - ஆதவ் சக்திவேல், 11, செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கப்பள்ளி

“கரகத்தைத் தலையில் சுமந்துகொண்டே ஆடுவது சுலபமில்லை என நான் கற்றுக்கொண்டேன்.  இதற்குமுன்பு நான் 5 வயதாக இருந்தபோதுதான் இங்கு வந்தேன்.” - வீரவேல் மணிகண்டன், 10, செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கப்பள்ளி

“நான் தவில், பறை, போன்ற தோல்கருவிகளை வாசிக்கக் கற்றேன்.” - ரோனி‌ஷ், 9, செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கப்பள்ளி

குறிப்புச் சொற்கள்