தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விலங்குகள் நலனுக்காக நிதி திரட்டிய மாணவர்கள்

2 mins read
f3181f65-bfaa-4424-8bb1-9481e8f2ab4b
பொங்கோல் கிரீன் தொடக்கப்பள்ளியின் தொடக்கநிலை 6 மாணவர்கள், தம் வருடாந்திர அட்டை விழா மூலம் திரட்டிய நிதியை துணை அமைச்சர் ஆல்வின் டான் முன்னிலையில் ‘எஸ்பிசிஏ’விடம் அளித்தனர். - படம்: ரவி சிங்காரம்

விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் (எஸ்பிசிஏ), அதன் மூன்றாம் ‘பாவ்சம் பாவ்டி’யை (Pawsome Pawty) சனிக்கிழமை (நவம்பர் 16) முழுவதும் அதன் வளாகத்தில் நடத்தியது. 

இளையர்களும் குடும்பத்தினரும் என மொத்தம் 800க்கும் மேற்பட்டோர் நிகழ்வுக்கு வந்திருந்தனர். கலாசார, வர்த்தக, இளையர்துறை மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் வருகையளித்தார்.

பொங்கோல் கிரீன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் தம் வருடாந்திர அட்டை விழாவை (cardboard) ஏற்பாடு செய்து, தமது அக்கறைக்குரிய சமூகக் கூறுகளுக்கு நிதி திரட்டினர். 

அவ்வகையில், மறுசுழற்சி செய்யப்பட்ட அட்டைகளைப் பயன்படுத்தி விளையாட்டுகள், கற்றல் கண்காட்சியை உருவாக்கி தம் பள்ளி மாணவர்களிடம் விலங்குகளின் நலம் பற்றிய விழிப்புணர்வை ஊட்டினர். இதன் மூலம் ‘எஸ்பிசிஏ’வுக்கு ஏறக்குறைய $2,800 நிதியைத் திரட்டி மாணவர்கள் நன்கொடையாக அளித்தனர்.

பொங்கோல் கிரீன் தொடக்கப்பள்ளி மாணவர்களின் கண்காட்சியில் துணை அமைச்சர் ஆல்வின் டான்.
பொங்கோல் கிரீன் தொடக்கப்பள்ளி மாணவர்களின் கண்காட்சியில் துணை அமைச்சர் ஆல்வின் டான். - படம்: ரவி சிங்காரம்

மற்ற சில மாணவர்கள் கைவினைப் பொருள்கள், கேலிச்சித்திரங்கள் போன்றவற்றின்மூலம் விலங்குகளுக்காக நிதி திரட்டினர். 

“கொவிட்-19 தொற்றுக்காலத்தில் பலரும் ஆர்வத்தோடு செல்லப்பிராணிகளை வாங்கினார்கள். ஆனால் அதன்பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதும் அவற்றைக் கைவிட்டனர். இந்நிலை மாறவேண்டும். முடிந்தால் செல்லப்பிராணிகளை வாங்குவதற்குப் பதிலாக அவற்றைத் தத்தெடுங்கள். ஆனால் அதற்கு முன்பு அது உங்களுக்கு ஏற்புடையதா என ஆய்ந்து பாருங்கள்,” என்றார் துணை அமைச்சர் ஆல்வின் டான்.

“நாங்கள் திரட்டிய நிதி மூலம் விலங்குகளுக்கு நல்வாழ்வு அளிக்க முடியும் என்ற மனநிறைவு எங்களுக்குக் கிடைத்தது,” என்றார் பொங்கோல் கிரீன் தொடக்கப்பள்ளி மாணவர் முகமது ராஷிட் நாசிஃப், 12.

பொங்கோல் கிரீன் மாணவர் முகமது ராஷிட் நாசிஃப், 12.
பொங்கோல் கிரீன் மாணவர் முகமது ராஷிட் நாசிஃப், 12. - படம்: ரவி சிங்காரம்

“செல்லப்பிராணிகள், விலங்குகளை எவ்வாறு பராமரிப்பது என நான் கற்றுவருகிறேன்,” என்றார் ‘எஸ்பிசிஏ’ தூதராகத் தொண்டாற்றும் ஹீதா, 10.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு ‘எஸ்பிசிஏ’யில் உள்ள விலங்குகளை நேரில் காணும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. அங்குள்ள முயல்கள், நாய்கள் பற்றிய பயிலரங்குகளும் நடைபெற்றன.

களிமண் அல்லது மற்ற கைவினைப் பயிலரங்குகள், மேடை இசை, நடனம், ‘எஸ்பிசிஏ’ சுற்றுலா, போட்டிகள், விழிப்புணர்வு ஊட்டும் கண்காட்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் வந்திருந்தோர் அனைவரும் கலந்துகொண்டு பயனடைந்து மகிழ்ந்தனர்.

எஸ்பிசிஏ தூதர் ஹீதா, 10 (நடுவில்), தன் தம்பி துர்வி‌ஷ், 8, தோழி டியா, 10, உடன் கைவினைப் பொருள்களில் பங்குபெற்றார்.
எஸ்பிசிஏ தூதர் ஹீதா, 10 (நடுவில்), தன் தம்பி துர்வி‌ஷ், 8, தோழி டியா, 10, உடன் கைவினைப் பொருள்களில் பங்குபெற்றார். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்