உற்சாகத்துடன் கதைசொன்ன மாணவர்கள்

உற்சாகத்துடன் கதைசொன்ன மாணவர்கள்

2 mins read
6f45a831-430f-4622-aaef-ce27ed048863
மாணவர்கள் தங்கள் கதையை அனைவரின் முன்னிலையில் படைக்கின்றனர். - படம்: ரவி கீதா திவிஜா
multi-img1 of 3

மாணவர்களின் கதை சொல்லும் திறனையும் கற்பனைத்திறனையும் வெளிப்படுத்திய கதை சொல்லும் போட்டி மே 31ஆம் தேதியன்று ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில், நடைபெற்றது.

ஃபிரான்டியர் சமூக மன்றம் இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியும் இணைந்து இப்போட்டிக்கு ஏற்பாடு செய்தன.

தொடக்கப் பள்ளி தமிழ் மாணவர்களுக்கு தமிழ்மொழியின் அவசியத்தை வலியுறுத்தவும் தமிழ்மொழியில் நன்கு வாசிக்கவும் பேசவும் வைப்பதே இப்போட்டியின் நோக்கம்.

பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள ‘திருக்குறள்’ தொடக்கநிலை 5 - 6 பிரிவிற்கு தலைப்பாகக் கொடுக்கப்பட்டது.

அப்பிரிவில் ஜெயபிரகாசம் ஜோசித் என்ற மாணவர் முதல் பரிசை வென்றார். 

“முதல் பரிசு பெற்றதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. தமிழ்மொழியில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் நமது பண்பாடும் விழாக்களும்தான். அவற்றை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்,” என்றார் மாணவர் ஜோசித். 

நிதர்சனா ரவிக்குமார் என்ற மாணவிக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது

தொடக்கநிலை 3 - 4 பிரிவிற்கு ‘கொன்றை வேந்தன்’ தலைப்பாகக் கொடுக்கப்பட்டது.

இந்தப் பிரிவில் தருண் நவீன் மைவிழி என்ற மாணவர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.

“எனக்கு முதல் பரிசு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போட்டிக்கு தயார் செய்த அனுபவம் நன்றாக இருந்தது. இணையத்தில் உள்ள ஒளிக்காட்சிகளைப் பார்த்து, சுவாரசியமாக கதை சொல்வது எப்படி என்பதை கற்றுக்கொண்டேன்,” என்றார் தருண். 

சிவானு பாவ்னா என்ற மாணவி இரண்டாம் நிலையைப் பெற்றார்.

தொடக்கநிலை 1 - 2 மாணவர்களுக்கு ‘ஆத்திசூடி’ தலைப்பாகக் கொடுக்கப்பட்டது.

இப்பிரிவில் வாங்கல் பிரதீப் அனன்யா என்ற மாணவி முதலிடம் பிடித்தார்.

“முதல்நிலையை அடைந்தது எனக்கு மனநிறைவு தருகிறது. இந்தப் போட்டிக்கு என்னைத் தயார்செய்த என் பெற்றோருக்கு நன்றிகூற விரும்புகிறேன். தமிழ்ச் சிறுகதைகள் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்றார் அனன்யா.

“இளவயதிலேயே மாணவர்களிடத்தில் விழுமியங்களை விதைக்க வேண்டும் என்பதற்காகவே ஆத்திசூடி, கொன்றை வேந்தன், திருக்குறள் ஆகியவற்றை இப்போட்டிக்கு தேர்ந்தெடுத்தோம்,” என்றார் ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் கணேசுகுமார் பொன்னழகு.

“இதுபோன்ற நிறைய போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யலாம் என்று நான் நினைக்கிறேன். இதன்வழி, மாணவர்கள் மேடை கூச்சமின்றி துணிச்சலாகத் தமிழில் பேசுவார்கள். நான் என் மகளின் தமிழ்மொழி வளத்தை மேம்படுத்த நிறைய நூலகங்களுக்கு அழைத்துச் சென்று, நல்ல புத்தகங்களை வாசிக்க வைப்பேன்,” என்றார் மாணவர் ஒருவரின் தாயாரான திருவாட்டி வெங்கடேசன் வினோதா, 35.

குறிப்புச் சொற்கள்