தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘படிப்போம், புத்தக வானில் பறப்போம்’ புத்தம்புது வாசிப்புத் திட்டம்

2 mins read
2b3b2c90-f2f5-4a7b-8db8-7c36fd411b77
‘படிப்போம், புத்தக வானில் பறப்போம்’ முன்னோட்டத் திட்டத்தில் பங்குபெறும் குவீன்ஸ்டவுன் தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் கல்வி, மனிதவளத் துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் (இடம்), தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவர் விக்ரம் நாயர் (வலம்) - படம்: பே கார்த்திகேயன்

மாணவர்களே, தமிழ்மொழியில் வாசிப்பது கடினம் என உங்களுக்குத் தோன்றுகிறதா? அல்லது புத்தகத்தைத் திறந்தாலே சலிப்படைகிறீர்களா?

தித்திக்கும் தேன்தமிழில் வாசிப்பது இனிதாக இருக்கவேண்டும் அல்லவா?

இதற்காகவே, கல்வி அமைச்சு அடுத்த ஆண்டிலிருந்து ‘‘படிப்போம், புத்தக வானில் பறப்போம்’ (MTL SOAR) என்ற புதிய சுவாரசியமான வாசிப்புத் திட்டத்தைத் தொடக்கநிலை 1,2 மாணவர்களுக்காகத் தொடங்கவுள்ளது!

தொடக்கநிலை 3 முதல் 6 வரையிலான மாணவர்களே, கவலை வேண்டாம்…2029க்குள் அனைத்துத் தொடக்கநிலை மாணவர்களுக்கும் இத்திட்டம் படிப்படியாக விரிவடையும். அப்போது நீங்களும் பயனடைவீர்கள்!

இத்திட்டத்தில் என்ன அடங்கும்?

இத்திட்டம்வழி, தாய்மொழிப் பாட நேரத்தில் அரை மணி நேரத்திற்கு நீங்கள் வாசிப்பு, நூலக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.

உங்கள் வாசிப்புப் பயணத்தைப் பதிவுசெய்ய வாசிப்புக் கடப்பிதழ்கள் (Reading Passports) உங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

மேலும், தேசிய நூலக வாரியத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட வாசிப்புப் பட்டியல்கள்மூலம் உங்கள் வயதுக்கேற்ற அற்புதமான நூல்களைப் பற்றித் தெரிந்துகொண்டு வாசித்து மகிழலாம்.

இத்திட்டம் இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் குவீன்ஸ்டவுன் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை ஒன்று மாணவர்களிடம் சோதிக்கப்பட்டுவருகிறது. அதில் பங்கேற்கும் மாணவர் கணே‌ஷ்ராம் ஜெய்குமார், 7, தன் வாசிப்புக் கடப்பிதழில் நிறைய கதைகளைப் பதிவுசெய்துள்ளார்.

“முன்பெல்லாம் கடினமான வார்த்தைகள் வந்தால் அவர் என்னை உடனே படித்துக் காட்ட சொல்வார். இப்பொழுது அவராகவே எழுத்துக் கூட்டிப் படிக்கிறார்,” என்றார் அவரது தாயார் திருவாட்டி விசாலாட்சி.

“கதையை வரிசைப்படுத்துவது, பொம்மலாட்டம் போன்ற நடவடிக்கைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கடினமான வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ள இவை உதவுகின்றன,” என்றார் கணேஷ்ராம்.

குறிப்புச் சொற்கள்