தித்திக்கும் பொங்கல் திருவிழா!

தித்திக்கும் பொங்கல் திருவிழா!

2 mins read
e42bdad4-9c8b-4199-8c6b-f738f31f2cf1
தித்திக்கும் பொங்கலை ருசிக்கும் மாணவர்கள். - படம்: ஜிங் ஷான் தொடக்கப்பள்ளி

ஜனவரி 15ஆம் தேதியன்று எங்கள் ஜிங் ஷான் பள்ளியில் பொங்கல் விழா களைகட்டியது.

விழாவிற்காக எங்கள் தமிழ் வகுப்பறையானது கரும்புகள், பொங்கல் பானை, வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு, பார்ப்பதற்கே மிக அழகாகக் காட்சியளித்தது.

போகிப் பண்டிகை என்பது பழைய பொருள்களை எரிப்பது மட்டுமல்ல, நம் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் தேவையற்ற பழக்கங்களையும் விட்டொழித்து, நல்ல சிந்தனைகளை விதைப்பதற்கான ஒரு நன்னாள் என்று ஆசிரியை கூறியது எனக்குப் புதுப் பாடமாக இருந்தது.

தைப்பொங்கல் அன்று நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றோம். 5ஆம் வகுப்பு மாணவர்களுடன் இணைந்து விழாவைக் கொண்டாடியது மேலும் சிறப்பாய் இருந்தது.

பொங்கல் பாடல்களின் தாளத்திற்கு ஏற்ப, நாங்கள் அனைவரும் பொங்கல் பானையைச் சுற்றி வட்டமாக நின்று கும்மியடித்து ஆடினோம். ஆட்டம் முடிந்ததும், ஆசிரியர்கள் பரிமாறிய தித்திக்கும் சர்க்கரைப் பொங்கல், மொறுமொறுப்பான வடை, சுண்டலைச் சாப்பிட்டு மகிழ்ந்தோம்.

மாட்டுப் பொங்கல் அன்று உழவர்கள் போற்றும் நவதானியங்களை அடையாளம் காணும் போட்டி நடைபெற்றது.

கலந்து வைக்கப்பட்டிருந்த பலவகைத் தானியங்களை, நாங்கள் போட்டி போட்டுக்கொண்டு சரியாகப் பிரித்தெடுத்து வகைப்படுத்தினோம். இது விளையாட்டாகவும் அதே சமயம் அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளவும்.

விழாவின் இறுதியில் பாரம்பரிய விளையாட்டான உறியடி நடைபெற்றது. இதில் ஒரு புதுமையாக, நாங்கள் பானைக்குப் பதிலாகத் தண்ணீர் நிரப்பப்பட்ட நெகிழிப் பைகளை கட்டி அடித்தோம்.

நீர் சிதற அந்தப் பைகளை உடைத்தது மிகுந்த ஆரவாரமாக இருந்தது. ஜிங் ஷான் பள்ளியின் இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டம், மகிழ்ச்சியும் மரபும் கலந்த ஒரு மறக்க முடியாத அனுபவமாக என் மனத்தில் பதிந்தது.

பவிகா, தொடக்கநிலை 6, ஜிங் ஷான் தொடக்கப்பள்ளி.

குறிப்புச் சொற்கள்