அரும்பணியாற்றிவரும் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ‘நல்லாசிரியர் விருது 2024’ விழா உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் சனிக்கிழமையன்று
(செப்டம்பர் 21) சிறப்பாக நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் இலைகளாலும் கிளைகளாலும் உறுதியான விழுதுகளாலும் நிழல் தந்து ஓர் ஆலமரம் ஆதரவு வழங்குவதுபோல், மாணவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து கல்வியில் சிறந்து விளங்க ஆதரவும் அரவணைப்பும் நல்கி வழிகாட்டுபவர்கள் ஆசிரியர்கள் என்று ஆசிரியர்களின் அரும்பணியை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் பாராட்டிப் பேசினார்.
மேலும் நல்ல பண்புகளை மாணவர்களுக்குப் புகட்டுவது ஆசிரியர்தான் என்ற அமைச்சர் சண்முகம், “நல்லாசிரியர்களே மாணவர்களுக்கும் இளையர்களுக்கும் முன்னோடியாவர், முன்மாதிரியாவர்.
மனிதப் பண்புகள், அறங்கள், வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள் ஆகியவற்றை தமிழ்மொழியோடு கற்பிப்பது முக்கியமாகும். தமிழ்மொழியைக் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், விழுமியங்கள், மரபு, பண்பாட்டுக் கூறுகளையும் கற்பிப்பது தமிழாசிரியர்களின் கடமையும் தனித்தன்மையும் ஆகும்,” என்றும் தெரிவித்தார்.
கடந்த 23 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இந்த விருது 200க்கும் மேலான தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மற்றும் புகுமுகக் கல்வி நிலைய ஆசிரியர்களை அங்கீகரித்துள்ளது.
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய தமிழ் முரசு நாளிதழின் இணை ஆசிரியரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின்
உறுப்பினருமான
வீ.பழனிச்சாமி, விருதிற்குக் குவிந்த 511 பரிந்துரைகளில் இருந்து தேர்வு விதிமுறைகளைப்
பின்பற்றி தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது ஏற்பாட்டுக் குழுவினருக்கு மிகுந்த சவாலாக இருந்தது என்றார். அடுத்த ஆண்டு தமிழ் முரசு நாளிதழ் தன்னுடைய 90வது ஆண்டு நிறைவைச் சிறப்பாகக் கொண்டாட இருப்பதையும் குறிப்பிட்டார் திரு பழனி.