கதைகள் பல வகைகளிலும் சொல்லப்படலாம்.
பாட்டி சொல்லும் கதை சிலருக்குப் பிடிக்கும். படங்களைக் கொண்டு சொல்லப்படும் ஒரு கதையில் சிலருக்கு ஆர்வம் இருக்கலாம்.
ஆனால், வயது வரம்பின்றி, அனைவரையும் ஈர்க்கும் ஒரு கதை சொல்லும் வழி, வில்லுப்பாட்டு என்று கூறினால் மிகையாகாது.
அக்காலத்தில் வில்லும் அம்பும் போருக்குப் பயன்படுத்தப்பட்டன. அதே வில்லு, வில்லுப்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. வில்லைப் பயன்படுத்தி பாட்டு இசைக்கப்பட, வில்லை வாசிப்பவரும் பாடுவார்.
இதனாலேயே, தொன்மை வாய்ந்த இக்கலைக்கு வில்லுப்பாட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது.
சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தளமாகவும் வில்லுப்பாட்டு கச்சேரிகள் திகழ்கின்றன.
அதுமட்டுமல்லாமல், இராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களைச் சுவாரசியமாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வில்லுப்பாட்டு பயன்படுத்தப்படுகிறது.
கிராமியப் பாடல்களின் பாங்கில் அவற்றைப் பாடுவதால், அவற்றிற்குரிய ஈர்ப்புத்தன்மையினாலும், உணர்ச்சிமிகு பாடல் வரிகளாலும், வில்லுப்பாட்டுப் பாடல்கள் மக்கள் மனத்தில் எளிதில் நிற்கும்.
தொடர்புடைய செய்திகள்
வாசிக்கும்போது, வில் ஆடாமலும் அசையாமலும் இருக்க, அந்த வில்லுக்குக் கீழ் ஒரு மண்பானை வைக்கப்படும்.
வில்லை வாசிப்பவர் ஒரு கேள்வி கேட்க, அதற்கு அவரது இசைக் குழுவினரும் ஒன்றிணைந்து ராகத்தோடு பதிலளிப்பார்கள்.
துணை இசைக்கருவிகளாக படைப்பை மெருகூட்ட, உடுக்கை, குடம், தாளம் கட்டை போன்றவையும் பயன்படுத்தப்படும்.
சில தருணங்களில், பார்வையாளர்களும் ஒன்று சேர்ந்து பதிலளிக்கலாம்.
இது படைப்பின் ஈர்ப்புத்தன்மையை அதிகரிக்க வெகுவாகக் கைக்கொடுக்கிறது.
ஒரு விவாதத்தில் எவ்வாறு தலைப்பை ஒட்டிப் பேசும் குழுவும், அதை வெட்டிப் பேசும் குழுவும் உள்ளனவோ, அதேபோல், ஒரு சில வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் இதே அணுகுமுறை கையாளப்படுகிறது.
இதை ஒருவித லாவணிப் பாடலாகவும் அழைப்பதுண்டு.


