காலத்தினால் செய்த நன்றி..

2 mins read
63ca46c0-1198-4651-bf17-cd23dcb0508f
முழங்காலில் அடிபட்டு அழுதுகொண்டு இருக்கிறார் சிறுமி. - படம்: ஊடகம்

வணக்கம் மாணவர்களே, இன்று உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு மறக்க முடியாத சம்பவத்தைப் பற்றி கட்டுரை எழுதப் போகிறீர்கள். தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டார்.

வகுப்பில் அமர்ந்திருந்த கலா, இந்தத் தலைப்பைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. உடனே மகிழ்ச்சியுடன் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி எழுதத் தொடங்கினாள்.

கலா, ஒரு நாள் பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது ஒரு சிறுமியைக் கண்டாள். அந்தச் சிறுமி நடந்து கொண்டிருக்கும்போது கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டாள்.

அவள் காலிலிருந்து இரத்தம் வழிந்து ஓடியது. அந்தச் சிறுமி வலி தாங்கமுடியாமல் தேம்பித் தேம்பி அழுதாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக ஊற்றியது.

கலா உடனடியாக அந்தச் சிறுமிக்கு உதவ வேண்டும் என்று உணர்ந்தாள். பள்ளி அருகில் இருந்ததால் அவள் சற்றும் தாமதிக்காமல் அந்தச் சிறுமியைப் பள்ளி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றாள்.

பள்ளி அலுவலகத்தில் இருந்த ஆசிரியர், சிறுமிக்கு முதலுதவி செய்தார். அடிபட்ட இடத்தில் துணியால் கட்டுப் போட்டு அந்தச் சிறுமியின் பெற்றோரைத் தொடர்புகொண்டார்.

சிறிது நேரத்தில் அந்தச் சிறுமியின் பெற்றோர் பதறிப்போய் வந்தனர். அவர்களிடம் நடந்தவற்றைக் கூறி, கலாதான் அந்தச் சிறுமியைப் பள்ளிக்கு அழைத்து வந்தாள் என்று கலாவைக் காட்டினார் ஆசிரியர்.

அந்தச் சிறுமியின் பெற்றோர் உடனே கலாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நன்றி கூறினார்கள். சிறுமியும் கலாவுக்கு நன்றி கூறிவிட்டு பெற்றோருடன் வீட்டிற்குச் சென்றாள்.

தான் செய்த இந்த சிறு உதவி எத்தனை பேருக்கு மனநிம்மதியைக் கொடுத்திருக்கிறது என்பதை நினைத்து மனதிற்குள் அசைபோட்டுக்கொண்டே வீடு திரும்பினாள் கலா.

மறுநாள், கலா வகுப்பறையில் இருக்கும்போது உள்ளே வந்த ஆசிரியர், “நான் இந்த வகுப்பில் இருக்கும் ஒருவருக்கு பரிசு கொடுக்கப்போகிறேன்,” என்று கூறினார்.

மாணவர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். “இந்தப் பரிசை நான் கலாவுக்குக் கொடுக்கப்போகிறேன்,” என்றார். கலாவின் முகம் சூரியனைக் கண்ட தாமரை போல் மலர்ந்தது. அவள் மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி தோன்றியது.

“கலா மற்றவர்களுக்கு உதவுவதில் சிறந்தவள் என்று கூறி, முதல்நாள் நடந்த சம்பவத்தைப் பற்றி மாணவர்களிடம் கூறினார். அத்துடன் கலாவைப்போல் நாமும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்,” என்று ஆசிரியர் கூறினார்.

‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’ என்ற திருக்குறளுக்கேற்ப எவ்வளவு சிறிய உதவியாக இருந்தாலும் நாம் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு உதவ வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

- நித்திகா, உயர்நிலை ஒன்று, பார்ட்லி உயர்நிலைப் பள்ளி

குறிப்புச் சொற்கள்