ஜனவரி மாதம் 17ஆம் தேதியன்று எங்கள் பள்ளியில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்ப் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் அறிந்துகொள்ளும் ஓர் அனுபவமாக இந்நிகழ்வு இருந்தது.
அன்று காலையிலேயே எங்கள் பள்ளியின் கீழ்த்தளம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பள்ளி இடைவேளையின்போது காலை 11 மணிக்குமேல் விழா தொடங்கியது. பள்ளி முதல்வர், துணைமுதல்வர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து புதுப்பானையில் பால், அரிசி, வெல்லம் போன்றவை சேர்த்து பொங்கலிட்டனர்.
பால் பொங்கி வழிந்தபோது பிற இன ஆசிரியர்களுடன் அங்கிருந்த மாணவர்களும் இணைந்து ‘பொங்கலோ பொங்கல்’ என்று உற்சாகமாய்க் கூவினர்.
பின்னர், மாணவர்களுக்கு அனுபவக் கல்வியை வழங்குவதற்காக ஆங்காங்கே சில அனுபவச் சாவடிகள் வைக்கப்பட்டிருந்தன.
கோலம் வரையும் சாவடியில் மாணவர்கள் அனைவரும் வண்ணப் பொடிகளை வைத்து கோலம் வரையக் கற்றுக்கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல் பாரம்பரிய முறையில் பால் கரப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ள பொம்மை மாட்டில் நெகிழிக் கையுறைகளில் பால் கலந்த தண்ணீரை ஊற்றி மாணவர்களுக்கு பால் கறக்கும் முறையைக் கற்பித்தனர். மாணவர்களும் அதை ஆர்வத்துடன் முயற்சித்து மகிழ்ந்தனர்.
மேலும், பாரம்பரிய விளையாட்டான உறியடித்தலுக்காக ஒரு சாவடி வைக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பானைக்குப் பதிலாக நெகிழிப்பையில் பூக்களைப் போட்டு கயிற்றில் தொங்கவிட்டிருந்தனர். அதை மாணவர்கள் அனைவரும் கண்ணைக் கட்டிக்கொண்டு நீண்ட கம்பை வைத்து அடித்து விளையாடினர்.
தொடர்புடைய செய்திகள்
கண்ணைக் கட்டிக்கொண்டு பையை அடிப்பது சவாலான ஒன்றாக இருந்தது. இருந்தாலும் மாணவர்கள் குதூகலத்துடன் அதில் பங்கேற்றனர்.
பின்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வண்ண ஆடைகள் அணிந்து மாணவர்கள் கரகாட்டம், கோலாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்களை ஆடிப் பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.
அது மட்டுமன்றி புகைப்படம் எடுக்கும் சாவடியும் இருந்தது. அங்கு பொங்கல் பானை, மாடு போன்ற உருவ பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகில் சென்று மாணவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
எங்கள் பள்ளியில் நடந்த இந்த விழா தமிழரின் மரபு, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.
தமிழர்கள் மட்டுமல்லாமல் பிற இன மாணவர்களும் ஆசிரியர்களும் இதில் கலந்துகொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இவ்வாறு
பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழா எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
பிருத்வி கணேஷ் தொடக்கநிலை 5 கார்ப்பரேஷன் தொடக்கப்பள்ளி