வானூர்திப் பந்தயத்தில் அசத்திய தீரா

வானூர்திப் பந்தயத்தில் அசத்திய தீரா

படம்: அனபெல் சாவ் ஜிங் சின்

04 May 2026 - 8:00 am

2 mins read

சிங்கப்பூரின் 17வது வானூர்திப் பந்தயத்திற்கான ( Singapore Amazing Flying Machine Competition) விருது வழங்கும் விழா, சிங்கப்பூர் எக்ஸ்போவில் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்றது.

அந்தப் போட்டியில் 768 குழுக்களில், கிட்டத்தட்ட 2,500 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

‘டிஎஸ்ஓ’ தேசிய ஆய்வுக்கூடங்களும் சிங்கப்பூர் அறிவியல் நிலையமும் இணைந்து பந்தயத்திற்கு ஏற்பாடு செய்தன.

இளம் புத்தாக்கத் திறனாளர்கள், வகுப்பறை பாடங்களைப் பொறியியல் தீர்வுகளாக மாற்ற உதவும் சிறந்த தளமாக அப்போட்டி அமைந்தது.

காகிதத்தால் வடிவமைக்கப்பட்ட விமானங்கள் முதல், மேம்பட்ட ஆளில்லா வானூர்தி அமைப்புகள்வரை பல்வேறு வகையான சவால்களை இப்பந்தயம் உள்ளடக்கியிருந்தது.

தொடக்கநிலை திறனாளர்களுக்கான திறன்மிகு ஆளில்லா வானூர்திப் போட்டிப் பிரிவில் தொடக்கநிலை ஐந்தில் பயிலும் தீரா சிவரஞ்சன் கலந்துகொண்டார்.

அவரது குழு அப்பிரிவில் வெற்றி பெற்றது. பிலே பிராக்டோ பள்ளி சார்பில் அவர்கள் அப்போட்டியில் பங்கேற்றனர்.

சவால்கள் நிறைந்த அப்போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டதாகவும் பள்ளி நேரத்திற்குப் பிறகு தாம் மேற்கொண்ட பயிற்சி வெற்றிபெற உதவியதாகவும் மாணவர் தீரா தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

வானூர்தியின் ஓடுபாதையில் திடீரென சில மாற்றங்கள் மேற்கொண்டது சற்றுக் கடினமாக இருந்தது என அவர் கூறினார்.

இருப்பினும், அதைக் கடந்து வெற்றி பெற்றது மிகுந்த பெருமையாக இருக்கிறது என்றார் தீரா.

வானூர்தி வடிவமைப்பு, கணினி நிரல் உருவாக்கம் (programming) ஆகியவற்றைப் பயிற்சியின்போது தாம் கற்றதாகவும் அதற்குப் பயிற்சியாளர் சிக்கர் அல்ஃபைன் உதவியதாகவும் அவர் சொன்னார்.

கூடுதல் பயிற்சியுடன் அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் நிச்சயம் கலந்துகொள்வேன் என உறுதியாகக் கூறினார் தீரா.

குறிப்புச் சொற்கள்
ஆளில்லா வானூர்திபோட்டிதொடக்கநிலை