தீபாவளியை முன்னிட்டு இந்திய மரபுடைமை நிலையம் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை சிறுவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தது.
‘தீபாவளிப் பொதுவரவேற்பு விழா’வை நடத்திய அந்நிலையம், கடந்த நான்கு வார இறுதி நாட்களில் அனைவருக்கும் இலவசமாகத் திறக்கப்பட்டது.
தீபாவளிப் பண்டிகையின் சிறப்பு அம்சங்களையும் பாரம்பரியத்தையும் சிறுவர்கள் அறிந்து மகிழ்ந்தனர்.
பெற்றோர், சிறுவர்களுக்கென ஏற்பாடுசெய்யப்பட்ட பயிலரங்குகள் குடும்பப் பிணைப்பை ஏற்படுத்தியதுடன், பண்டிகையின் கொண்டாட்டங்கள் பற்றிய புரிதலை அதிகரித்தன.
தீபத் திருநாளையொட்டிய வெவ்வேறு கைவினை நடவடிக்கைகளிலும் அவர்கள் பங்கேற்று களித்தனர்.
தீபாவளி அஞ்சல் அட்டைகளை வடிவமைத்து, தீபாவளி வாழ்த்துகளை எழுதுவது, களிமண்ணால் அணிகலன்கள் செய்வது, வண்ணம் தீட்டுவது போன்ற நடவடிக்கைகள் மூலம் பண்டிகை உணர்வில் சிறுவர்கள் திளைத்தனர்.
சிறுவர்களுக்கெனத் தீபாவளி நடவடிக்கை நூலையும் இந்திய மரபுடைமை நிலையம் வழங்கியது.
அதைக் கொண்டு சிறுவர்கள் நிலையத்தின் ஒவ்வொரு மாடிக்கும் சென்று வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

