பாரம்பரியத் தமிழ்ப் பண்பாட்டின் சங்கமம்

பாரம்பரியத் தமிழ்ப் பண்பாட்டின் சங்கமம்

படம்: சீனிவாசன் சமீக்‌ஷா

04 May 2026 - 9:00 am

2 mins read

தமிழ் மொழி விழாவையொட்டி, மணிமாறன் கிரியேஷன்ஸ் திருவிழாக் கொண்டாட்டம் எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

சிங்கப்பூர் மாணவர்களிடையே தமிழ் நாட்டுப்புறக் கலைகளையும் பண்பாட்டையும் கொண்டு சேர்க்கும் பாலமாக அது அமைந்தது. 

தமிழ் மொழி மேம்பாட்டுக் குழு, தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்ற அவ்விழாவில், 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நவீன உலகில் தொழில்நுட்பங்களுக்கு மத்தியில் வளரும் இளைய தலைமுறைக்கு, தமிழ்ப் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்துவதே நிகழ்ச்சியின் முதன்மை நோக்கம்.

“மாணவர்கள் தங்களின் வேர்களுடன் இணைவதற்காகவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம்,” என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடனக் கலைஞருமான 27 வயது ஜனனி மணிமாறன் கூறினார்.

ஒயிலாட்டத்தைக் கண்டுகளித்ததுடன் மாணவர்கள் அந்நடனத்தை ஆடியும் பார்த்தார்கள்.
ஒயிலாட்டத்தைக் கண்டுகளித்ததுடன் மாணவர்கள் அந்நடனத்தை ஆடியும் பார்த்தார்கள். - படம்: சீனிவாசன் சமீக்‌ஷா

“கலைகள் மூலம் நமது பண்பாட்டை மிக எளிதாக அவர்களிடம் கொண்டு சேர்க்க முடிகிறது,” என்றார் அவர்.

விழாவின் முக்கிய அங்கமாக கின்னஸ் சாதனையாளரும் கலை சிகிச்சை நிபுணருமான 66 வயது, விஜயா மோகன் அவர்கள் நடத்திய கோலம் கலைப் பயிலரங்கு அமைந்தது.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாகக் கோலம் வரைந்து வரும் அவர், “கின்னஸ் சாதனை படைத்தது பெருமை அளிக்கிறது,” என்றார்.

“கோலம் என்பது வெறும் அழகுக்காக வரையப்படும் கலை மட்டுமல்ல, அது நம்மைச் சீர்படுத்தும் ஒரு தியானமாகவும் சிறந்த உடல் பயிற்சியாகவும் விளங்குகிறது,” என்று திருவாட்டி விஜயா மோகன் கூறினார்.

புள்ளிக் கோலம் வரையவும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.
புள்ளிக் கோலம் வரையவும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர். - படம்: சீனிவாசன் சமீக்‌ஷா

“ஏழு வயதிலிருந்தே ரங்கோலி வரைந்து வருகிறேன்.  ஆண்களும் பெண்களும் இக்கலையைக் கற்று, பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.’’ என்றார் பிரணவ் பக்‌ஷி, 14.

நிகழ்ச்சியில் கரகாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் போன்ற கண்கவர் ஆடல் நிகழ்வுகளும் நடைபெற்றன.

மாணவர்கள் தோரணம் கட்டுதல், புள்ளிக்கோலம் வரைதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டனர். 

மாணவர்கள் தோரணம் கட்டி மகிழ்ந்தனர்.
மாணவர்கள் தோரணம் கட்டி மகிழ்ந்தனர். - படம்: சீனிவாசன் சமீக்‌ஷா

மாணவர்கள் ஒயிலாட்டத்தின் தாளத்திற்கேற்ப ஆடியது விழாவுக்குச் சிறப்புச் சேர்த்தது.

“சிங்கப்பூரில், தமிழ்ப் பண்பாட்டை தமிழ் மக்களே முன்னின்று பாதுகாக்கவில்லை என்றால் வேறு யார் செய்வார்கள்? இது இளைஞர்களாகிய நமது பொறுப்பு,” என்று கூறினார் தொண்டூழியரான 19 வயது ரித்தா ஜெனி.

பாடப்புத்தகங்களுக்கு அப்பால், அனுபவபூர்வமாகக் கற்றல் முறையில் அமைந்திருந்த திருவிழாக் கொண்டாட்டம், தமிழ்ப் பண்பாட்டின் வண்ணங்களை ஆழமாகப் பதியச் செய்துள்ளது என்று பங்கேற்பாளர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்