சிங்கப்பூரின் தொடக்கப்பள்ளி 6ஆம் வகுப்பைச் சேர்ந்த 12,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டு நாள்கள் இலவச காலை உணவை பெறவிருக்கின்றனர்.
செப்டம்பர் 3, 4 தேதிகளில் தீவு முழுவதும் உள்ள சியர்ஸ், ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ் கடைகளில் மாணவர்கள் காலை உணவுப் பைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஃபேர்பிரைஸ் குழுமம், அதன் சியர்ஸ் காலை உணவு மன்றத்தின் முயற்சியாக இது இடம்பெறுகிறது என்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) அறிக்கையில் தெரிவித்தது.
இலவச காலை உணவு விநியோகம், இம்முறை இரண்டாவது ஆண்டாக நடைபெறுகிறது.
தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஆதரவாக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்று ஃபேர்பிரைஸ் குழுமம் கூறியது.
ஒவ்வொரு பையிலும் பழங்கள், ரொட்டி, சிக்கன் எஸ்ஸென்ஸ், மைலோ, சிரியல் உட்பட 20 வெள்ளி மதிப்புக்கும் மேற்பட்ட பொருள்கள் இருக்கும்.
யோகட், சாண்ட்விச் மற்றும் ஐஸ்கீரிம் பெறுவதற்கான கூப்பன்களும் பைகளில் வைக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை குறிப்பிட்ட கடைகளில் கூப்பன்களைக் காட்டி ஐஸ்கீரிம் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
தொடக்கநிலை 6ஆம் வகுப்பு மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோர் தங்களுடைய பிள்ளையின் மாணவர் அடையாள அட்டை அல்லது பிஎஸ்எல்இ தேர்வுச்சீட்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைக் காட்டி சிங்கப்பூரில் உள்ள 113 கடைகளிலிருந்து காலை உணவுப் பொட்டலத்தைப் பெறலாம்.
ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பொட்டலம் வழங்கப்படும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உணவுப் பொட்டலம் விநியோகிக்கப்படும்.
2024ஆம் ஆண்டில் அனைத்து 12,000 மாணவர்களும் இரண்டே நாள்களில் உணவுப் பையை பெற்றுக் கொண்டதாக குழுமம் கூறியது.
இவ்வாண்டு சிண்டா, யயசான் மெண்டாக்கி, சீனர் மேம்பாடு உதவி மன்றம் போன்ற அறப்பணி அமைப்புகளால் பலனைடையும் மாணவர்களுக்காக 1,000க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிஎஸ்எல்இ எழுத்துத் தேர்வு செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறுவதாக சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகத்தின் இணையத்தளம் தெரிவிக்கிறது.

