ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் வட ராக்ஹோப்பர் பெங்குவினுடன் சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் முதல் முறையாக கெண்டூ இனத்தைச் சேர்ந்த பெங்குவினுக்கு பிறந்த இரண்டு கெண்டூ பெங்குவின்களுடன் பறவைப் பூங்காவின் ‘ஓஷன் நெட்வொர்க் எக்ஸ்பிரஸ் பெங்குவின் கோவ்’ கிறிஸ்துமசைக் கொண்டாடியது.
கெண்டூ இனத்தை சேர்ந்த பெங்குவின்கள் மற்ற அனைத்து பெங்குவின்களையும் விட மிகவும் வேகமாக நீந்தக் கூடியவை என்பது உங்களுக்குத் தெரியுமா? இவை ஓர் ஒலிம்பிக் நீச்சல் வீரனை விட நான்கு மடங்கு அதிக வேகத்தில் நீந்தக் கூடியவை. அண்மையில் இவற்றின் எண்ணிக்கை பறவைப் பூங்காவில் அதிகரித்துள்ளது.
கெண்டூ பெங்குவின்களின் இரண்டு புதிய குஞ்சுகள்
புதிய பெங்குவின் குஞ்சுகள் விடுமுறை காலத்தில் கூடுதல் மகிழ்ச்சியைக் கொண்டு வந்திருக்கின்றன.
நவம்பர் 25, 2024 அன்று, 4 வயது ரிக்கி பெங்குவினும் 3 வயது பெண் பீச் பெங்குவினும் தங்களின் முதல் முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சை வரவேற்றன. இரண்டு நாள்களுக்குப் பிறகு 27 நவம்பர் 2024 அன்று இரண்டாவது முட்டை வெற்றிகரமாக குஞ்சு பொரித்தது. இருப்பினும், இரண்டாவது குஞ்சுக்கு பெற்றோர் குறைவாக உணவளிப்பதை பெங்குவின் பராமரிப்பாளர்கள் கவனித்தனர்.
இரண்டு குஞ்சுகளுக்கும் உணவளிக்க வேண்டிய நிலையில் ரிக்கியும் பீச்சும் இருந்தன. ஆனால், அவை வழங்கும் உணவு இரண்டு குஞ்சுகளுக்கும் சரிசமமாக கிடைக்காது என்பதால் முதல் பெங்குவினை பெற்றோரான ரிக்கி, பீச் பராமரிப்பிலும் இரண்டாவது பெங்குவினை பராமரிப்புக் குழுவும் வளர்க்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி ஒருநாள் வயதான இரண்டாவது பெங்குவின் குஞ்சு பராமரிப்புக் குழுவின் மேற்பார்வையில் ஓஷன் நெட்வொர்க் எக்ஸ்பிரசின் மூன்றாவது மாடியில் உள்ள ஆராய்ச்சி அறையில் பராமரிப்புக் குழுவினரால் வளர்க்கப்படுகிறது.
பெங்குவின்கள் பிறந்தபோது அவை சுமார் 98 கிராம் எடையுடன் காணப்பட்டது. இந்த அழகிய கெண்டூ இனத்தைச் சேர்ந்த பெங்குவின் குஞ்சுகள் பிறந்த பல மாதங்களுக்குப் பிறகு தங்களின் சிறகுகளை உதிர்த்து புதிய சிறகுகள் முளைக்கக் காத்திருக்கும்.
இந்த உதிர்ந்த இறகுகளை மரபணு (DNA) பரிசோதனை செய்து இந்த பெங்குவின்களில் ஆண் பெண் பாகுபாடுகளை அறிவார்கள்.
தொடர்புடைய செய்திகள்
தனிப்பட்ட உணவளிப்பு நேரங்களில் ‘ஓஷன் நெட்வொர்க் எக்ஸ்பிரஸ்’ ஆய்வு அறையில் இரண்டாவது பெங்குவின் குஞ்சு பராமரிக்கப்படுவதைக் காணலாம். அதற்கு ஊட்டச்சத்துக்காக க்ரில், சிவப்பு வெங்கணை போன்ற மீன்கள் கொடுக்கப்படுகிறது.
ஆண் கெண்டூ பெங்குவின் கூழாங்கற்களை ஒன்றாகக் குவித்து கூடுகளை உருவாக்கும். பின்னர் பெண் கெண்டூ பெங்குவின் அந்த கூடுகளில் முட்டைகளை இடும். பெண் பெங்குவின் உணவு தேடிச் செல்லும்போது ஆணும் ஆண் பெங்குவின் உணவு தேடிச் செல்லும்போது பெண் பெங்குவினும் மாறி மாறி முட்டைகளின் மேல் அமர்ந்து குஞ்சுகள் வெளியே வரும் வரை அடை காக்கும்.
பாஸ்கலின் அற்புதப் பயணம்
வட ராக்ஹோப்பர் இனத்தைச் சேர்ந்த பெங்குவின்கள் தென்துருவத்திற்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடல் தெற்குப்புறம், அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றன.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம், இந்த பெங்குவின்களின் இருப்பிடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியக் கடற்கரையில் பாஸ்கல் என்னும் ஒரு வயது பெண் பெங்குவின் கரை ஒதுங்கியது.
சோர்வுற்ற பாஸ்கலை பெர்த் விலங்கியல் பூங்கா மீட்டெடுத்து அதற்கு சிகிச்சை அளித்தது.
நிபுணர்கள் பாஸ்கலை மீண்டும் கடலில் விடுவிப்பது அதன் உயிருக்கு ஆபத்து என்பதால் அதனைப் பாதுகாப்பாக வளர்க்க முடிவெடுத்தனர்.
பறவை பூங்காவில், பெங்குவின்களுக்காக இருக்கும் குளிர்ந்த உப்பு நீரானது இதுபோன்ற பெங்குவின்களுக்கு உகந்த இடமாக இருக்கிறது. அதுபோன்ற சூழ்நிலை சிங்கப்பூர் பறவைப் பூங்காவில் இருப்பதால் பாஸ்கல் சிங்கப்பூரை நோக்கித் தனது பயணத்தை மேற்கொண்டது.
பியர் என்னும் வட ராக்ஹோப்பர் பெங்குவின் 2020ஆம் ஆண்டு பெர்த் விலங்கியல் பூங்காவால் மீட்டெடுக்கப்பட்டு சிங்கையை வந்தடைந்தது.
அருகி வரும் இந்த இனத்தைச் சேர்ந்த பாஸ்கல், பியர் ஆகிய இரண்டு பெங்குவின்களும் தற்பொழுது சிங்கப்பூர் பறவைப் பூங்காவில் உள்ளன.
பாஸ்கல் இனத்தைச் சேர்ந்த பெங்குவின்களின் தலை, மஞ்சள்-ஆரஞ்சு நிறத்தில் இருப்பதுடன் அதன் வெண்மை நிற வயிறும் அவற்றுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
பாஸ்கல் போன்ற பெங்குவின்கள் அசைந்தாடி, தத்தித் தத்தி நடப்பதோடு பனிப்பாறைகளுக்கு இடையே தாவும் வலிமையும் பெற்றுள்ளன.
பாஸ்கல் பறவைப் பூங்காவில் இருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட கெண்டூ, ஹம்போல்ட், வட ராக்ஹோப்பர் மற்றும் கிங் இனங்களைச் சேர்ந்த பெங்குவின்களுடன் இவை புது வாழ்க்கையைத் தொடங்க இருக்கின்றன.

