உலகச் சதுரங்க வெற்றியாளரான குகேஷ் சென்னை அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் பயின்று வருகின்றார்.
அண்மையில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமிதம் சேர்த்த குகேஷை கௌரவிக்கும் விதமாக பள்ளிக்கூட வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே அவருக்கு ‘மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ்’ எனும் உலகத் தரம் வாய்ந்த சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘லேசர்’ கண்காட்சி, ‘டிரோன் ஷோ’, ‘எலெக்ட்ரிக்’ நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்தே குகேஷுக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.
“அறிவு மற்றும் கணித்தலின் பெரிய அளவுகோலாக கருதப்படும் சதுரங்க விளையாட்டில் வெற்றிகளைக் குவிப்பதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் குகேஷ் போன்ற வீரர்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் பிறர் தலைநிமிர்ந்து பார்க்க வைக்கின்றனர்,” என்று தலைமையாசிரியர் பாராட்டினார்.
“குகேஷுக்கு ஏழு வயதாக இருந்தபோதே அவருடைய திறமையைக் கண்டு வியந்தேன். அவர் ஒன்றாம் வகுப்பில் படித்தபோதே அவருக்கென்று தனியாக பல ஆண்டுகள் பயிற்சி கொடுக்கத் தொடங்கினேன்,” என்றார் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் சதுரங்கப் பயிற்றுவிப்பாளர் வி.பாஸ்கர்.