அன்று ஞாயிற்றுக்கிழமை. நான் எழுந்து என் காலைப் பணிகளை முடித்த பிறகு மிதிவண்டியில் அருகில் இருந்த ஏரி வழியாக சென்று கொண்டிருந்தேன்.
ஏரியில் தட்டு ஒன்று மிதப்பதுபோல் தெரிந்தது. யாரோ தட்டை வீசி இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு சென்றுவிட்டேன்.
வெகுதூரம் சென்ற பிறகு களைப்படைந்ததால் வீடு திரும்ப மிதிவண்டியைத் திருப்பினேன்.
வழியில் நான் முன்பு பார்த்த இடத்தில் இருந்த தட்டு மெதுவாக அசைந்து அசைந்து செல்வது தெரிந்தது. அச்சம் என் மனதைக் கவ்விக் கொண்டது. நான் திடுக்கிட்டு மிதி வண்டியிலிருந்து இறங்கினேன். மனதை ஒருவாறு திடப்படுத்திக் கொண்டு அது என்ன என்று உற்றுப் பார்த்தேன்.
அந்தோ பரிதாபம்! ஓர் ஆமையின் முதுகு ஓடுதான் தண்ணீரின் மேலே மிதந்து கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
அந்த ஆமை நெகிழிப் (பிளாஸ்டிக்) பையால் சுற்றப்பட்டு அது மூச்சு விட முடியாமல் திணறுவதைக் கண்டேன்.
நான் அண்மையில் நெகிழிப் பைகளில் கடல்வாழ் உயிரினங்கள் மாட்டிக்கொண்டு உயிரிழப்பதைப் படித்தேன்.
அதை நான் கண்கூடாகக் கண்டபோது அதிர்ச்சியில் உறைந்துபோனேன்.
அதைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. அதோடு என் ஆசிரியர் மற்ற உயிரினங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறியதும் அச்சமயம் மின்னலென என் மனதில் பளிச்சிட்டது. உடனே நான் அந்த ஆமைக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால், அது தண்ணீரில் மிதந்துகொண்டு இருந்தது.
தண்ணீரின் ஆழம் எனக்குத் தெரியவில்லை. எனக்கு நீச்சலும் தெரியாது. அதனால் எப்படி அந்த ஆமையைக் காப்பாற்றுவது என்று தீவிரமாக சிந்தித்தேன்.
உடனே மற்றவர்களின் உதவியுடன்தான் அந்த ஆமையைக் காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்து மிதிவண்டியில் வேகமாக மக்கள் இருக்கும் இடத்தை அடைந்தேன்.
அங்கிருந்தவர்களிடம் ஆமையின் நிலையைப் பற்றிக் கூறியதும் அவர்களில் ஒருவர் உடனே ‘ஏக்கர்ஸ்’ எனும் விலங்கு நல அமைப்பைத் தொடர்புகொண்டார்.
சிறிது நேரத்தில் ஏக்கர்ஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் அந்த ஆமையை மீட்கும் பணியில் விரைந்து செயல்பட்டனர்.
அதைக் கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது அந்த பிளாஸ்டிக் பை அதன் கழுத்தில் மாட்டி இருந்தது தெரிந்தது. அதன் முகம் முழுவதும் நெகிழிப் பையால் மூடப்பட்டு இருந்தது. அதனால்தான் மூச்சு விட முடியாமல் திணறி இருந்தது என்பதை அதிகாரிகள் கூறினர்.
அந்த நெகிழிப் பையை எடுத்ததும் அது வெளிக்காற்றை நன்கு சுவாசித்தது. அதன் கழுத்தில் சிறு காயம் இருந்தது. அதற்கு அதிகாரிகள் மருந்து போட்டு தங்கள் இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு இரண்டொரு நாள்கள் வைத்திருந்து அதைக் கண்ணும் கருத்துமாக கண்காணித்து பின் அது நலமுடன் இருப்பதை உறுதி செய்ததும் மீண்டும் அது இருந்த ஏரியிலேயே விட்டு விடுவதாகக் கூறிச் சென்றார்கள்.
ஒரு செயலும் அதன் விளைவும் என்பதைப்பற்றி அன்று தெள்ளத் தெளிவாக இந்நிகழ்வின் மூலம் தெரிந்துகொண்டேன்.
அடுத்த நாள், செய்தித்தாளில் ‘ஆமையைக் காப்பாற்றிய வீரன்,’ என்னும் தலைப்பில் என் புகைப்படத்தோடு வெளியிடப்பட்ட கட்டுரையைப் பார்த்த ஆசிரியர் என்னை அழைத்து பாராட்டினார்.
அவர் இதைப்பற்றி தலைமை ஆசிரியரிடம் எடுத்துக்கூறினார். தலைமையாசிரியரும் என்னை வெகுவாகப் பாராட்டினார்.
அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் மறுநாள் நான் நடந்ததைப் பற்றிப் பள்ளிக்கூடத்தில் உரையாற்றினேன். அதன்மூலம் என் பள்ளியில் இருந்தவர்கள் மறு சுழற்சியின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டார்கள்.
நிதில், தொடக்கநிலை 5, மெரிடியன் தொடக்கப்பள்ளி

