புதிய அம்சங்களுடன் குழந்தைகளுக்கான நீர் விளையாட்டு இடம்

2 mins read
f21eba99-dcf1-4404-a1ef-2820b49d9094
ஜேக்கப் பாலாஸில் இரண்டு வயது முதல் 12 வரையுள்ள சிறுவர்கள் நீரில் விளையாடி மகிழ்கிறார்கள். - படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

ஷர்வேஸ்வரி சரவணன்

ஜேக்கப் பாலாஸ் குழந்தைகள் நீர் விளையாட்டு இடம் மறுசீரமைப்பு பணிகளுக்குப் பிறகு புதுப் பொலிவுடன் பிப்ரவரி 25ஆம் தேதி மீண்டும் தன் கதவுகளைத் திறந்துள்ளது.

அந்த இடம் மூன்று மடங்கு விரிவாக்கத்துடன் புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.

சிங்கப்பூர் பூமலையில் இடம்பெற்றுள்ள அந்த நீர்விளையாட்டு இடம், 2019ஆம் ஆண்டின் முற்பகுதியில் புதுப்பிப்புக்காக மூடப்பட்டது. இதையடுத்து 2023 நவம்பரில் அங்கு கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.

தற்போது அது, முன்பைவிட 500 சதுர மீட்டர் பரப்பளவுக்கு பெரிதாக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை வாயிலாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது.

நீர் சுழற்சிக்கு தாவரங்களின் பங்கை எடுத்துக் காட்டும் விதமாக ‘மிஸ்ட் ஸோன்ஸ்’, ‘வேடிங் பூல்ஸ்’, ‘வாட்டர் ஜெட்ஸ்’ உள்ளிட்ட நீர் விளையாட்டுகளில் குழந்தைகள் பங்கேற்கலாம். அவை குழந்தைகளின் கற்றலுக்கும் விளையாட்டுக்கும் வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

நீர் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒளி, ஒலி வழிகாட்டியுடன் சுற்றுச்சூழலில் எவ்வாறு நீர் வழிந்து செல்கிறது என்பதை குழந்தைகள் விளையாடிக் கற்றுக்கொள்ளலாம்.

சிறுவர்கள் குடை நீர்வீழ்ச்சி, ஸ்பிளாஷ் பக்கெட், வானவில் வளைவு போன்ற அம்சங்களின் மூலம் மழை எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பதை அறிந்துகொள்ளலாம்.

‘வாட்டர் ஜெட்ஸ்’ அம்சம் மூலம் ஆவியாதல் முறையும் (Evaporation) சித்திரிக்கப்படுகிறது.

நீர் எவ்வாறு உயரமான மட்டத்திலிருந்து கீழ் மட்டத்திற்கு வழிந்தோடுகிறது என்பது பற்றி குழந்தைகள் ஸ்பிளாஷ் ஸோனிலுள்ள சிறு மலைகளிலும் மேடுகளிலும் இருக்கும் தரை நீரோட்டம் மூலம் கற்றுக்கொள்ளலாம்.

வருகையாளர்கள் இடத்தைப் பாதுகாப்பாகவும் காய்ந்த இடமாகவும் வைத்திருக்க கால்வாய் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய மாற்றங்களாக கூடுதலான இருக்கைகள், கழுவும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இயற்கையின் பாரம்பரியம் பற்றி குழந்தைகள் கற்றுக்கொள்ள 2007 முதல் ஜேக்கப் பாலாஸ் விளையாட்டு பூங்கா செயல்பட்டு வருகிறது.

சிங்கப்பூர் பூமலையில் அமைந்துள்ள நீர் விளையாட்டு இரண்டு முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏற்றது. அதற்கு அனுமதி இலவசம்.

ssharves@sph.com.sg

குறிப்புச் சொற்கள்