நாம் ஏன் கண் சிமிட்டுகிறோம்? - ஒரு குட்டி அறிவியல்!

நாம் ஏன் கண் சிமிட்டுகிறோம்? - ஒரு குட்டி அறிவியல்!

2 mins read
மாணவர்களே! நாம் அடிக்கடி கண்களைச் சிமிட்டுகிறோம் அல்லவா? நாம் ஏன் அப்படிச் செய்கிறோம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? நம் கண்கள் செய்யும் ஒரு அற்புதமான விந்தை அது! நாம் ஏன் கண் சிமிட்டுகிறோம் என்பதற்கு மூன்று சுவாரசியமான காரணங்கள் இருக்கின்றன:
166daef3-da4d-4521-b069-df87d2d5fbcc
ஒரு நாளைக்கு 10,000 தடவைகளுக்கும் மேல் கண்களைச் சிமிட்டுகிறோம். - படம்: செயற்கை நுண்ணறிவு

1. துடைப்பான் போல: மழை பெய்யும் போது வாகனங்களின் முகப்புக் கண்ணாடியை ஒரு கருவி (வைப்பர்) துடைத்துச் சுத்தம் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். அதேபோலத்தான் நம் கண் இமைகளும் செயல்படுகின்றன! நாம் சிமிட்டும் போதெல்லாம், காற்றில் பறந்து வரும் கண்ணுக்குத் தெரியாத சிறு தூசிகளை அவை துடைத்துச் சுத்தம் செய்து விடுகின்றன.

2. கண்களுக்கு ஈரப்பதம்: செடிகள் வாடிப் போகாமல் இருக்க நாம் தண்ணீர் ஊற்றுவோம் அல்லவா? அதேபோல, நம் கண்களும் காய்ந்து போகாமல் இருக்க வேண்டும். நாம் கண் சிமிட்டும் ஒவ்வொரு முறையும், ஒரு மெல்லிய கண்ணீர்த் திரை நம் கண் முழுவதும் பரவி, கண்களைக் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்கிறது.

3. சிறந்த பாதுகாவலன்: திடீரென ஒரு சிறு பூச்சியோ, பந்தோ நம் கண்ணருகே வேகமாக வரும்போது நம்மை அறியாமல் உடனே இமைகளை மூடிக்கொள்கிறோம் அல்லவா? வெளிச்சம் மிகவும் அதிகமாக இருந்தாலும் கண்கள் உடனே சுருங்கும். கண்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் ஒரு பாதுகாப்புக் கேடயம்தான் இந்தச் சிமிட்டல்!

ஒருவர் சராசரியாக ஒரு நாளில் 10,000 தடவைகளுக்கும் மேல் கண்களைச் சிமிட்டுகிறார். சராசரியாக 0 முதல் 5 விநாடிகளுக்கு ஒருமுறை கண்கள் சிமிட்டப்படுகின்றன.

இந்தப் பணிகளைச் செய்யும் கண்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். தூசி, புகை உள்ள இடங்களில் தொடர்ந்து இருப்பதைத் தவிர்க்க வேண்டும். சிறுவயதிலிருந்தே சூரிய வணக்கம் செய்வது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

சுருக்கமாகச் சொன்னால், கண் சிமிட்டுவது என்பது நம் கண்களைச் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும், ஈரப்பதத்தோடும் வைத்துக் கொள்ள நம் உடல் செய்யும் ஒரு உன்னதமான பயிற்சி!

கண்களைப் பாதுகாக்க சில வழிகள்

திரை நேரம் குறைப்பு: அலைபேசி, தொலைக்காட்சி பார்ப்பதைக் கட்டாயம் குறைக்கவும்.

கண்களுக்கு ஓய்வு: திரையைப் பார்க்கும்போது சிறு இடைவெளி விட்டுத் தொலைவில் உள்ளவற்றைப் பார்த்துக் கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும்.

சத்தான உணவு: கீரை வகைகள், பப்பாளி, முட்டை, பால் போன்ற சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.

சரியான பழக்கம்: போதிய வெளிச்சத்தில், புத்தகத்தை ஓரடித் தொலைவில் வைத்துப் படிக்க வேண்டும். படுத்துக்கொண்டு படிக்கக்கூடாது.

கசக்கக் கூடாது: அழுக்குக் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. தூசு விழுந்தால் குளிர்ந்த தூய்மையான நீரால் கழுவ வேண்டும்.

திறந்தவெளி விளையாட்டு: நாள்தோறும் திறந்தவெளியில் குறைந்தது ஒரு மணிநேரமாவது விளையாட வேண்டும்.

ஆழ்ந்த உறக்கம்: கண்களுக்கு முழுமையான ஓய்வு கிடைக்க, நாள்தோறும் எட்டு மணிநேரமாவது நன்றாகத் தூங்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்