பிளாஸ்டிக் பந்தைவிட ரப்பர் பந்து அதிகமாகத் துள்ளுவது ஏன்?

3 mins read
ba1bcef9-3133-4dc0-97c9-bcd0a0c14ee7
ரப்பர் பந்து - படம்: இந்து தமிழ் திசை

ரப்பர் பந்துக்கு ‘மீள்தன்மை’ (Elasticity) மிக அதிகம். அதாவது, இழுத்தாலோ அல்லது அமுக்கினாலோ மீண்டும் தன் பழைய வடிவத்திற்கே சட்டென்று திரும்பும் குணம் இதற்கு உண்டு.

நீங்கள் ரப்பர் பந்தைத் தரையில் வீசும்போது, அது தரையில் மோதிய வேகத்தில் லேசாக நசுங்கும். ஆனால், அடுத்த நொடியே “நான் நசுங்க மாட்டேன்!” என்று அடம் பிடித்து, மிக வேகமாகத் தன் பழைய உருண்டை வடிவத்திற்கே திரும்பும். அந்த வேகம்தான் பந்தை உயரே எம்பித் துள்ள வைக்கிறது.

ஆனால், பிளாஸ்டிக் பந்துக்கு இந்தத் தன்மை குறைவு. அது தரையில் மோதும்போது ரப்பர் பந்து போல வேகமாகத் தன்னை சரிசெய்து கொள்ளாது. அதனால்தான் அது குறைவாகத் துள்ளுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், ரப்பர் பந்து ஒரு ‘ஸ்பிரிங்’ (Spring) போலச் செயல்படும்!

கால் வலி.
கால் வலி. - படம்: செயற்கை நுண்ணறிவு

கீழே விழுந்துவிட்டாலோ இடித்துக்கொண்டாலோ கை, கால்கள் ஏன் வலிக்கின்றன?

வலி தெரியாவிட்டால் நன்றாகத்தான் இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், உண்மையில் வலி தெரியாவிட்டால் அது நமக்குத்தான் பெரிய ஆபத்து. உதாரணத்திற்கு, விளையாடும்போது கீழே விழுந்து ரத்தம் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். வலி மட்டும் இல்லையென்றால், உங்களுக்கு அடிபட்டிருப்பதே தெரியாது. நீங்களும் அதைக் கவனிக்க மாட்டீர்கள். ரத்தம் வெளியேறிக்கொண்டே இருந்தால், அது உயிருக்கே ஆபத்தாகிவிடும் அல்லவா? ‘ரத்தம் வருகிறது, உடனே மருந்து போடு’ என்று நமக்கு உணர்த்துவதே அந்த வலிதான்.

நமது உடலில் எந்த இடத்தில், என்ன பிரச்சினை ஏற்பட்டாலும், அதை நமக்கு உணர்த்தும் ஒரு ‘எச்சரிக்கை மணி’ (Warning Bell) தான் இந்த வலி!

உடலில் ஓரிடத்தில் அடிபட்டவுடனே, மூளை நரம்புகளுக்குக் கட்டளையிட்டு, “அங்கே பார். அடிபட்டு இருக்கிறது, வலிக்கிறது!” என்று நமக்குத் தெரியப்படுத்துகிறது. அதனால்தான், தலைவலி, வயிற்றுவலி என்று எது வந்தாலும், நாம் உடனே சுதாரித்துக்கொண்டு மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்கிறோம்.

எனவே, வலி நமக்கு ஒரு பாதுகாப்பான நண்பன். வலி நல்லதுதான். ஆனால், அதற்காக அடிக்கடி இடித்துக்கொள்ளக் கூடாது. பார்த்து கவனமாக விளையாடவேண்டும்.

தேன் எப்படி இனிக்கிறது? வேலைக்காரத் தேனீக்கள் நீண்ட தூரம் பறந்து சென்று, பூக்களில் இருக்கும் தேனை (Nectar) உறிஞ்சுகின்றன. பூக்களிலிருந்து எடுக்கும்போது, அதில் நிறையத் தண்ணீரும் குளுக்கோஸ் போன்ற இனிப்புச் சத்துகளும் கலந்திருக்கும்.

தேனீக்கள் இந்தத் தேனைத் தங்கள் வயிற்றில் உள்ள ஒரு பையில் சேமித்து கூட்டுக்குக் கொண்டு வருகின்றன. வரும்போதே அந்தத் தேனில் சில வேதியியல் மாற்றங்கள் நடக்கத் தொடங்குகின்றன. கூட்டுக்கு வந்ததும், அந்தத் தேனை அங்கிருக்கும் மற்ற தேனீக்களிடம் கொடுக்கின்றன.

அந்தத் தேனீக்கள், தங்கள் வாயில் சுரக்கும் ஒரு திரவத்தை (நொதிகள்) அதனுடன் கலக்கின்றன. இது தேனில் உள்ள சர்க்கரையை உடைத்து, தேன் கெட்டுப்போகாமல் இருக்க உதவும் அமிலத்தன்மையை உருவாக்குகிறது.

பூவிலிருந்து எடுக்கும்போது தேனில் 70 விழுக்காடு தண்ணீர் இருக்கும். அதைத் தேனடை அறைகளில் ஊற்றி வைப்பார்கள். பிறகு, தேனீக்கள் தங்கள் சிறகுகளை வேகமாக அசைத்து விசிறி, காற்றை வீசும்.

இதனால் தேனில் உள்ள தண்ணீர் ஆவியாகி (20 விழுக்காட்டிற்கும் குறைவாக மாறி), தேன் நன்றாகக் கெட்டியாகிவிடும். இப்படித்தான் நமக்குக் கெட்டுப்போகாத, தித்திக்கும் தேன் கிடைக்கிறது!

குறிப்புச் சொற்கள்