விண்வெளிப் பயணத்துக்கு ஏன் விமானத்தைப் பயன்படுத்தாமல் ராக்கெட்டைப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியுமா?
தேசிய தினத்தன்று ராக்கெட் விடுவதைப் பார்த்திருப்பீர்கள். அதில் சிறிய குழாய் மூலம் நெருப்பு பின்புறமாக பீறிடும்போது ராக்கெட் வானம் நோக்கி முன்னேறுகிறது. அதாவது மேல் நோக்கி பாய்கிறது.
விண்வெளியில் செயற்கை கோள்களை செலுத்தவும் மனிதனை விண்வெளிக்கு சுமந்து செல்லவும் பயன்படுத்தப்படுகின்ற ராக்கெட்டுகளும் இந்த அடிப்படையில்தான் செயல்படுகின்றன.
விண்வெளிப் பயணத்துக்கு ராக்கெட்டைத்தான் பயன்படுத்தியாக வேண்டும் என்பதற்கு முக்கியமான காரணம் உள்ளது. விமானங்கள் அதற்கு ஏற்றவை அல்ல.
விமான எஞ்சின்களில் உள்ள எரிபொருள் எரிவதற்கு காற்று தேவை. அதாவது காற்றில் உள்ள ஆக்சிஜன் தேவை. தவிர விமானங்கள் உயரே உயரே எழும்புவதற்கு (இறக்கைகளின் அடிப்புறத்தில் வெற்றிடம் உண்டாவதால்) காற்று தேவை.
ராக்கெட்டுக்கு இந்த பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனால் ராக்கெட்டுகள் உயரே கிளம்பி காற்றே இல்லாத விண்வெளி பிரதேசத்தில் இயங்க வேண்டும். ஆகவே, ராக்கெட்டுகளில் எரிபொருளுடன் ஆக்ஸிஜனையும் அளிக்கின்ற பொருள் பயன்படுத்தப்படுகின்றது.
சில ராக்கெட்டுகளில் திட வடிவிலான எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. திரவ எரிபொருளும் பயன்படுத்தப்படுவது உண்டு.
அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டிய திறன் மிக்க ராக்கெட்களில் ஆக்சிஜன் வாயுவையும் ஹைட்ரஜன் வாயுவையும் திரவ வடிவில் தயாரித்து பயன்படுத்துகிறார்கள்.
பல அடுக்கு ராக்கெட்களில் வெவ்வேறு அடுக்குகளில் வெவ்வேறு எரிபொருள்கள் பயன்படுத்துப்படும் வசதி உள்ளது.
இன்னும் எளிமையாக கூற வேண்டுமானால், கடலில் மீன் வகைகள் உள்ளன. அது தண்ணீரைக் குடித்துவிட்டு பின்புற உறுப்புகள் வழியே பீச்சியடிக்கும். இப்படி பீச்சும் போது, மீன் நீந்தத் தேவையின்றி முன்னோக்கிச் செல்கிறது.
இப்படி எந்த வகையான ராக்கெட்டாக இருந்தாலும் ராக்கெட்டின் தத்துவமே இதுதான். இது மீனின் தத்துவத்தைப் போன்றதுதான்.
அதனால் தான் விண்வெளிக்குச் செல்ல விமானத்தை பயன்படுத்தாமல், ராக்கெட்டை பயன்படுத்துகிறார்கள்.

