சிங்கப்பூரில் நடந்து முடிந்த உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியின் இறுதிச் சுற்றில் சீன கிராண்ட்மாஸ்டரும் கடந்த ஆண்டின் உலகச் சதுரங்க வெற்றியாளருமான டிங் லிரனை வீழ்த்தி பட்டம் வென்றார் டி.குகேஷ்.
இதன்மூலம் இளம் வயதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்து அவர் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
ரஷ்ய சதுரங்க வீரர் கேரி காஸ்பராவ் 1985ஆம் ஆண்டு தமது 22 வயதில் உலக வெற்றியாளர் பட்டம் வென்றதே முன்னைய சாதனையாக இருந்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு 18 வயதான குகேஷ் அந்த சாதனையை முறியடித்து ஆக இளம் சதுரங்க வீரராக வாகை சூடியுள்ளார்.
உலக சாம்பியன் பட்டத்தை இதற்கு முன்பு தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை வென்று சாதனை படைத்திருந்தார்.
சிங்கப்பூரில் நடந்து முடிந்த உலக சதுரங்க போட்டியின் இறுதிச் சுற்றில் சீன கிராண்ட்மாஸ்டரும் கடந்தாண்டின் உலகச் சதுரங்க வெற்றியாளருமான டிங் லிரனை இறுதிச் சுற்று ஆட்டத்தின்போது உலகச் சதுரங்க வெற்றியாளரான டிங் லிரன் தவறாக காயை நகர்த்தியதைக் கண்டுகொண்டார் குகேஷ் தொம்மராஜு. உடனே தன்னுடைய காயை நகர்த்தி வெற்றி வாகையைச் சூடினார் அவர்.
அந்த நேரத்தில் குகேஷின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்து ஓடியது. உடன் அவர் அந்தச் சதுரங்கப் பலகையின்மீது தனது தலையைச் சாய்த்தது அதற்கு நன்றி தெரிவிப்பதுபோல் இருந்தது.
அதன் பின்னர் போட்டி நடைபெற்ற அறையில் இருந்து வெளியே வந்த அவர், அங்கு காத்திருந்த தனது தந்தையை ஆரத்தழுவினார்.
வெற்றியாளர் பட்டம் வென்ற டி.குகேஷ் கூறும்போது, “நான் ஆறு, ஏழு வயதிலிருந்தே உலக வெற்றியாளர் பட்டத்தை பற்றி கனவு கண்டு வந்தேன். இந்த தருணத்துக்காகவே வாழ்ந்தேன். எந்தவொரு சதுரங்க வீரரும் இந்த தருணத்தை அடையவே விரும்புவார். அதில் நான் இருப்பதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். கேண்டிடேட்ஸ் தொடர் முதல் இங்கு வரை எனது முழு பயணமும் வெற்றியாக அமைந்தது. இது கடவுளின் அருளால் மட்டுமே சாத்தியமானது,” என்று உணர்ச்சிப் பொங்க பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், “பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு உலக வெற்றியாளர் பட்டம் இந்தியாவிடம் இருந்து பறிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு நடைபெற்ற உலக வெற்றியாளருக்கான ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, அந்த கண்ணாடிக் கூண்டுக்குள் ஒரு நாள் நானும் இருப்பது மிகவும் அருமையாக இருக்கும் என்று நினைத்தேன்.
“பத்து ஆண்டுகளுக்கு முன்பே வெற்றியாளர் பட்டத்தை மீண்டும் நாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்ற கனவு எனக்குள் எழுந்தது. தற்போது பட்டத்தை வென்றுள்ளேன். இதைவிடச் சிறந்தது எதுவுமில்லை. நெடுநாள் என் பயணம் நீடிக்க வேண்டும். மேக்னஸ் கார்ல்சனைப் போல் சதுரங்கத்தில் கோலோச்ச வேண்டும்,” என்று தம் அடுத்தகட்ட திட்டத்தையும் அவர் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.
இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், அனைத்துலகப் போட்டிகளில் விளையாடி உலக வெற்றியாளர் பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர். அவருக்குப் பிறகு, உலக வெற்றியாளர் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை உலக வெற்றியாளர் பட்டத்தை வென்றுள்ளார். குகேஷ் பல ஆண்டுகள் உலகச் சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று என்று கூடியிருந்த பலரின் விருப்பமாக இருந்தது.