சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு பற்றியும் செய்தித்துறையைப் பற்றியும் விளக்கும் பயிலரங்குக்காக தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஒன்றுகூடி கற்றுக்கொண்டனர்.
இந்தப் பயிலரங்கு, 1000 தோபாயோ நார்த்தில் உள்ள எஸ்பிஎச் மீடியா கட்டடத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
பயனியர் தொடக்கப்பள்ளி, வெஸ்ட் குரோவ் தொடக்கப்பள்ளி, ஜூரோங் வெஸ்ட் தொடக்கப்பள்ளி, ஃபரண்ட்டியர் தொடக்கப்பள்ளி, சிங்னான் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து 79 மாணவர்கள் வந்திருந்தனர்.
செய்தித்துறையைப் பற்றி கற்ற மாணவர்கள், தமிழ் முரசில் என்னென்ன வகையான செய்தி அறிக்கைகள் உள்ளன என்பதைப் பற்றி தெரிந்துகொண்டனர்.
பொது அறிவு, மொழி அறிவு, அறப்பண்புகள் ஆகிய பண்புகள் செய்தியாளர்களுக்குத் தேவைப்படுகிறது என்பதும் மாணவர்களிடம் கூறப்பட்டது.
செய்தி அறிக்கை எழுதுவதற்கு யார், எது, எங்கே, எப்போது, ஏன், எப்படி ஆகிய ஆறு அடிப்படைக் கேள்விகளையும் பற்றி அவர்கள் கற்றனர்.
நேர்மை, ஆர்வம், கவனம், துணிவு, நிதானம், தன்னடக்கம் ஆகிய அடிப்படைப் பண்புகளை செய்தித்துறையில் இருப்பவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் கற்றனர்.
தமிழ் முரசின் வர்த்தக அடையாள நிர்வாகி ச.ஐஸ்வர்யா, தமிழ் முரசு செய்தியாளர் அனுஷா செல்வமணி ஆகியோருடன் நான் பயிலரங்கின் பயிற்சியாளர்களாகச் செயல்பட்டேன்.
தொடர்புடைய செய்திகள்
எங்களுடன், தமிழ் முரசின் துணை ஆசிரியர்களும் மாணவர் முரசின் ஆசிரியருமான பட்டு மற்றும் உதவி ஆசிரியர் சுபாஷினி சிவானந்தன் ஆகியோரும் மாணவர்களிடம் உரையாடி விளக்கங்கள் அளித்தனர்.
செய்திகளைச் சேகரித்து எழுதி அதனை உடனுக்குடன் பதிப்பது சவாலானது என்பதை மாணவர்கள் புரிந்துகொண்டனர்.
செய்தி சேகரிப்பது பற்றி கற்றுக்கொண்ட மாணவர்களில் பலர் செய்தி ஆசிரியராக ஆசைப்படுவதாக ஜூரோங் வெஸ்ட் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த தொடக்கநிலை 4 மாணவர் ஆரவ் கூறினார்.
செய்தித்தாள் எவ்வாறு அச்சிடப்படுகிறது என அறிய மாணவர்கள் ஆர்வமாய் உள்ளதாகவும் பயனியர் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த ஆதியா, லோகேஷ், நிவ்யன், வர்சினிஸ்ரீ ஆகியோர் கூறினர்.
தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் மீண்டும் உறவாடும் வாய்ப்பைப் பெற்றது குறித்து மகிழ்வதாக செய்தியாளர் அனுஷா செல்வமணி கூறினார்.