தமிழோடு விளையாடு: வாகை சூடியது இயூ டீ தொடக்கப் பள்ளி

தமிழோடு விளையாடு: வாகை சூடியது இயூ டீ தொடக்கப் பள்ளி

2 mins read
39e0e43d-f953-442f-8570-7027ed9f7cca
வெற்றிக் கிண்ணங்களுடன் இயூ டீ தொடக்கப் பள்ளி மாணவர்கள். - படம்: மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு

இவ்வாண்டிற்கான ‘தமிழோடு விளையாடு’ போட்டியில் வாகை சூடியது இயூ டீ தொடக்கப் பள்ளி.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்திப் பிரிவு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்துவரும் இப்போட்டியின் இறுதிச் சுற்றில் ஐந்து தொடக்கப் பள்ளிகள் பங்கேற்றன.

மொத்தம் ஐந்து பள்ளிகள் பங்கேற்ற ‘தமிழோடு விளையாடு’ போட்டியின் இறுதிச் சுற்றில் இயூ டீ தொடக்கப் பள்ளி வாகை சூடியது.
மொத்தம் ஐந்து பள்ளிகள் பங்கேற்ற ‘தமிழோடு விளையாடு’ போட்டியின் இறுதிச் சுற்றில் இயூ டீ தொடக்கப் பள்ளி வாகை சூடியது. - படம்: மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு

பல்வேறு வினாடி வினாக்கள், விளையாட்டுகள் அடங்கிய ஐந்து விறுவிறுப்பான சுற்றுகளில் மாணவர்கள் தமிழ் மொழியில் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

இந்தப் போட்டி, மீடியாகார்ப் நிறுவனமும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் இணைந்து மேற்கொண்டுவரும் ஒரு நீண்டகாலக் கூட்டுமுயற்சி.

இது, மாணவர்களிடையே தமிழ் மொழிப் புலமையை ஊக்குவிக்கும் நோக்கிலும் மொழியின் பரவலான பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏழாவது முறையாக நடைபெற்ற இப்போட்டியில் கிட்டத்தட்ட 70 பள்ளிகள் பங்கேற்றன.

தொடக்கநிலை 4, 5 மாணவர்களை இலக்காகக்கொண்ட இதன் தொடக்கச் சுற்றில் ஏறத்தாழ 300 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

சிறப்பாகச் செயல்பட்ட 20 பள்ளிகள் அரையிறுதிச் சுற்றுக்கும் ஐந்து பள்ளிகள் இறுதிச் சுற்றுக்கும் முன்னேறின.

“பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகள் வழியாக பள்ளிகள், ஆசிரியர்களுடன் நாங்கள் அணுக்கமாக இணைந்து செயல்படுகிறோம். தமிழ் மொழியை நம் இளையர்களுக்கு இருவழித் தொடர்புத்தன்மை மிக்கதாகவும் அவர்களுக்குப் பொருத்தமானதாகவும் மாற்றுவதன் மூலம் அதன்மீதான பற்றை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்,” என்றார் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் தலைவர் ந.குணாளன்.

2017ல் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதில் ஆர்வத்தை விதைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முழுவதும் மின்னணுச் சிறுபலகையில் விளையாடப்படும் இப்போட்டியில் மாணவர்கள் தமிழில் தட்டச்சு செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.

முழுவதும் மின்னணுச் சிறுபலகையில் விளையாடப்படும் இப்போட்டியில் மாணவர்கள் தமிழில் தட்டச்சு செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.
முழுவதும் மின்னணுச் சிறுபலகையில் விளையாடப்படும் இப்போட்டியில் மாணவர்கள் தமிழில் தட்டச்சு செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றனர். - படம்: மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு

இப்போட்டிமூலம் மாணவர்கள் தங்கள் சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்ளவும், தமிழ்ச் சொற்களைப் பிழையின்றி எழுதவும், குழுப்பணி, விரைவாகச் சிந்தித்தல் போன்ற மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் முடிந்தது. நான்கு பேர் கொண்ட குழுக்களாகப் பள்ளிகள் இதில் பங்கேற்றன.

குறுக்கெழுத்துப் புதிர்கள், ஒத்த சொற்கள், எதிர்ச்சொற்கள், எழுத்துக்கோவை, கலைந்த சொற்களை முறைப்படுத்துதல் போன்ற மொழி விளையாட்டுகளை மாணவர்கள் விளையாடினர்.

குறிப்புச் சொற்கள்