‘தாறுமாறு ரன்னர்ஸ்’ எனும் ஓட்டக் குழுவும் ‘ஜென்டில்மேன்’ முடிதிருத்தும் கடையும் இணைந்து ‘ஹேர் ஃபார் ஹோப் அன்ட் ரன்’ நிகழ்ச்சிக்கு சனிக்கிழமை (மே 10) காலை ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் புற்றுநோய் அறக்கட்டளையை ஆதரிக்க மொத்தம் 17 பங்கேற்பாளர்கள் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் ஒன்றுகூடி தலைமுடியைத் துறந்தனர்.
அவர்களில் ஆக இளைய பங்கேற்பாளரான 10 வயது வால்டர் அர்ஜூனா, அவரது தந்தை திரு ரிச்சர்ட் மோகனுடன், 45, இணைந்து தைரியமாக தலையை மழித்தார்.
“புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும் காட்ட என் அப்பாவுடன் சேர்ந்து இந்த அர்த்தமுள்ள முயற்சியில் பங்கேற்றேன். கடினமான நேரத்தில் அவர்கள் தனியாக இருப்பதைப் போல் உணர மாட்டார்கள் என்பது என் ஆசை,” என்று வால்டர் கூறினார்.
வால்டரின் தாயார் திருவாட்டி புவனேஸ்வரி காண்டிபன், தமது மகன் இந்த முயற்சியில் ஈடுபட்டதில் மிகுந்த பெருமை கொண்டுள்ளதாக சொன்னார்.
வால்டரின் வகுப்புத் தோழர்களுக்கு இந்தச் செயலின் முக்கியத்துவத்தை புரியவைக்குமாறு பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டுகொண்டதாக அவர் கூறினார்.
“சில நேரங்களில் பிள்ளைகள் விவரம் தெரியாமல் கேலி செய்யலாம். ஆனால், வால்டர் தலைமுடியை துறந்தது ஒரு நல்ல நோக்கத்திற்காக என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்தத் தருணம் வால்டரின் மனதில் நீங்கா நினைவாகும் என்றும் உதவி தேவைப்படும் பிறருக்கு தயங்காமல் தொடர்ந்து உதவி செய்யும் மனப்பான்மையை வால்டர் கடைப்பிடிப்பார் என்றும் திருவாட்டி புவனேஸ்வரி நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியின் மற்றொரு அங்கத்தில், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் 5 கி.மீ. ஓட்டம் நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் ‘ஹேர் ஃபார் ஹோப்’ சட்டைகளைப் பெருமையுடன் அணிந்துகொண்டு ஒன்றாக இந்த அங்கத்தில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின்வழி குழந்தைகள் புற்றுநோய் அறக்கட்டளைக்காக இதுவரை $9,000க்கும் அதிகமாக நிதி திரட்டப்பட்டுள்ளது.