அறிவை வளர்க்கும் இளம் அறிவியலாளர்கள்

2 mins read
a2cf70b6-1cfa-4c50-b594-64ec6a9fec62
‘டைனோ கேப்சர்’ எனும் விளையாட்டை உருவாக்கிய குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளி (பொங்கோல்) மாணவி ஆரியா ரானா. அவருடன், கலாசார, சமூக, இளையர்துறை, வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் லோ யென் லிங். - படம்: ரவி சிங்காரம்

‘ஜூராசிக் பார்க்’ திரைப்படத்தின் இறுதியில் ஒரு பெண், கம்பத்தைப் பிடித்துக்கொண்டு ஊசலாடியபடி, டைனோசர் அவரைக் கடிக்க முயன்றது.

அப்போதுதான் ‘டைனோ கேப்சர்’ எனும் விளையாட்டை உருவாக்கலாம் எனும் எண்ணத்தைப் பெற்றார் குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியின் பொங்கோல் அறிவார்ந்த வளாக மாணவி ஆரியா ரானா.

ஒரு விளையாட்டாளர் கயிற்றை இழுக்கும்போது பந்து ஏதேனும் ஒரு திசையில் சுற்றும். மற்றொருவர், டைனோசர் வாயை இயக்கி, பந்தைக் கவ்வ முயலவேண்டும்.

அவரது புத்தாக்க விளையாட்டுக்காக, நவம்பர் 13ஆம் தேதி சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற 28வது சோனி புத்தாக்க அறிவியல் விருதுப் போட்டியில் ‘விஸ்கிட்’ பிரிவில் அவருக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.

அவரைப் போல் இளம் அறிவியலாளர்களை உருவாக்கும் சிங்கப்பூரின் ஆகப் பெரிய பொம்மை உருவாக்கப் போட்டியே இப்போட்டி.

தேசிய அளவில் தீவு முழுவதும் 90 பள்ளிகளிலிருந்து கிட்டத்தட்ட 6,000 தொடக்கநிலை மாணவர்கள் கலந்துகொண்டனர். 3,800க்கும் மேற்பட்ட படைப்புகள் அனுப்பப்பட்டன. கீழ், மேல் தொடக்கநிலை என இரு பிரிவுகளில் 67 மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

இவ்வாண்டின் போட்டி, சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மரபுடைமை புத்தாக்க விருதை அறிமுகப்படுத்தியது. அவ்வாறு ஐந்து விருதுகள் வழங்கப்பட்டன.

காந்தசக்தியால் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்க உதவும் ரோபாட்டை உருவாக்கியுள்ளார் ‘கின்டுல் கிட்ஸ்’ அனைத்துலகப் பள்ளியின் அத்வைத் விஹான் பெத்தி‌ஷெட்டி. அவருக்கு ‘மெரிட்’ விருது கிடைத்தது.

‘மெரிட்’ விருது பெற்ற  ‘கின்டுல் கிட்ஸ்’ அனைத்துலகப் பள்ளியின் அத்வைத் விஹான் பெத்தி‌ஷெட்டி.
‘மெரிட்’ விருது பெற்ற  ‘கின்டுல் கிட்ஸ்’ அனைத்துலகப் பள்ளியின் அத்வைத் விஹான் பெத்தி‌ஷெட்டி. - படம்: ரவி சிங்காரம்

அட்டையாலான ரோபாட் உருவம், டிசி மோட்டோர், மின்கலன், ‘எல்இடி’ ஒளி போன்றவற்றைக் கொண்டு இந்த ரோபாட்டைச் செய்தார் அத்வைத்.

சிங்கப்பூரின் வரைபடத்தில் வெவ்வேறு இடங்களுக்குப் “பேனா”வால் ஒளியூட்டும் விளையாட்டை உருவாக்கினார் யூமின் தொடக்கநிலைப் பள்ளி மாணவி கீர்த்திவாசன் சக்தி. அவருக்கு ‘மெரிட்’, ‘மரபுடைமை புத்தாக்கம்’ விருதுகள் கிடைத்தன.

‘மெரிட்’, ‘மரபுடைமை புத்தாக்கம்’ விருதுகள் பெற்ற யூமின் தொடக்கப் பள்ளி மாணவி கீர்த்திவாசன் சக்தி.
‘மெரிட்’, ‘மரபுடைமை புத்தாக்கம்’ விருதுகள் பெற்ற யூமின் தொடக்கப் பள்ளி மாணவி கீர்த்திவாசன் சக்தி. - படம்: ரவி சிங்காரம்

“எனக்கு எம்ஆர்டியில் பயணம் செய்யப் பிடிக்கும். ஆனால் எங்கு இறங்குவதென எனக்குத் தெரியாது. அதனால் நான் எனக்கென இவ்விளையாட்டை உருவாக்கினேன்,” என்றார் சக்தி.

ஃபேரர் பார்க் தொடக்கப்பள்ளி மாணவி மேக்கவர்ன் ஏ‌ஷ்லி ‌ஷேனன், காந்தசக்தியைக் கொண்டு வனவிலங்குகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவருக்குப் ‘பாராட்டு’, ‘நல்ல பொறியியல்’ விருதுகள் கிடைத்தன.

ஃபேரர் பார்க் தொடக்கப்பள்ளி மாணவி மேக்கவர்ன் ஏ‌ஷ்லி ‌ஷேனன், காந்தசக்தியைக் கொண்டு வனவிலங்குகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஃபேரர் பார்க் தொடக்கப்பள்ளி மாணவி மேக்கவர்ன் ஏ‌ஷ்லி ‌ஷேனன், காந்தசக்தியைக் கொண்டு வனவிலங்குகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். - படம்: ரவி சிங்காரம்

இப்போட்டி தொடங்கியதிலிருந்து 94,000க்கும் மேற்பட்ட புத்தாக்கப் படைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்