பிரபல சிறுவர் எழுத்தாளர் ரோல்ட் டாலின் (Roald Dahl) ‘பிக் ஃபிரென்ட்லி ஜயண்ட்’ (Big Friendly Giant) உருவப் பொம்மை, வரும் ஏப்ரல் 22 முதல் உயிர் பெறவுள்ளது.
4.8 மீட்டர் உயரமான பெரும் கைப்பாவையான இதனை இயக்குவதற்கு நான்கு பேர் தேவைப்படுகின்றனர்.
உண்மையான மனிதரைப்போல் தலையை அசைப்பது, புருவங்களை உயர்த்துவது போன்ற சிறிய அசைவுகளை இந்தப் பொம்மையால் செய்ய முடிகிறது.
இந்த உருவப் பொம்மையின் தோற்றம், கண்களுக்கு விருந்தளிக்கும் நிகழ்வாக அமையவுள்ளது.
14 கைவினைக் கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து இந்தப் பொம்மையை 14 மாதங்களில் உருவாக்கினர்.
மிக உயரமான மனிதர் ஒருவர் ஆதரவற்ற சிறுமியைப் பராமரிக்கும் கதையை ‘பிக் ஃபிரென்ட்லி ஜயண்ட்’ கதை எடுத்துரைக்கிறது.
தீயவற்றை எதிர்க்கும் அந்த உயரமான மனிதரும் சிறுமியும் இங்கிலாந்து ராணியைச் சந்தித்துப் பேசுவது போல இந்தக் கதை அமைந்துள்ளது.
சிங்கப்பூரின் எஸ்பிளனேட் (Esplanade) அரங்கில் இந்த உருவப் பொம்மை நாடகம் நடைபெறவுள்ளது.
வெளிநாட்டுக் கலைஞர்களும் உள்ளூர்க் கலைஞர்களும் இணைந்து பிரம்மாண்ட மேடை நிகழ்ச்சிகளைப் படைக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவுகின்றன.


