முயற்சி செய்பவருக்கே வெற்றி கிட்டும்

முயற்சி செய்பவருக்கே வெற்றி கிட்டும்

சித்திரிப்பு: செயற்கை நுண்ணறிவு

28 Sep 2026 - 6:23 am

3 mins read

“டிக்... டிக்... டிக்…” எனத் தேர்வு அறைக்குள் கடிகாரத்தின் ஓசை என் இதயத்துடிப்பைவிட வேகமாக ஒலிப்பதுபோல் இருந்தது.

என் கைகள் நடுங்கின. நெற்றியில் வியர்வை அரும்பியது. நான் சந்தித்த மிக முக்கியமான தேர்வு அது.

அந்த இக்கட்டான சூழ்நிலையில் என் பதற்றத்தைத் தணித்து, என்னைச் சாதிக்க வைத்தது, ஆசிரியர் எனக்குக் கூறிய அந்த ஒரு மறக்க முடியாத அறிவுரைதான்.

“மாணவர்களே! அரையாண்டுத் தேர்வுகளுக்கு இன்னும் இரு வாரங்கள்தான் இருக்கின்றன. இப்போதிலிருந்தே தேர்வுக்குத் தயார் செய்யுங்கள்,” என்று என் வகுப்பாசிரியர் திருமதி சாந்தி எங்களிடம் கூறினார்.

செவிடன் காதில் ஊதிய சங்குபோல அவர்கள் கூறியதை நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ஆசிரியர் கூறியதைக் கேட்டதும் மற்ற மாணவர்கள் அன்றிலிருந்து அல்லும் பகலும் படிக்க ஆரம்பித்தனர்.

நானோ என் கணினியில் விளையாடுவதிலும் தொலைக்காட்சியில் கேலிச் சித்திரம் பார்ப்பதிலும் பொழுதைக் கழித்தேன். என்னைக் கவனித்த அம்மா, ஒருநாள் என்னை அழைத்து அறிவுரை கூறினார்.

ஆனால், அதை நான் பொருட்படுத்தாமல் எனது கணினி விளையாட்டில் மும்முரம் காட்டினேன். நாள்கள் உருண்டோடின. அரையாண்டுத் தேர்வுக்கான நாளும் வந்தது.

“ஐயோ! நாளை எனக்குக் கணிதத் தேர்வு இருக்கிறது. இன்னும் நான் தயார் செய்யவில்லை!” என்று முணுமுணுத்தவாறே பயிற்சிப் புத்தகத்தை எடுத்து சில கேள்விகளுக்குப் பதிலளிக்க முயற்சி செய்தேன்.

ஆனால், இரவு நேரமாகியதால், கண் அயர்ந்து அப்படியே தூங்கிவிட்டேன். காலையில் அம்மா என்னை எழுப்பியதும் அரக்கப் பரக்கப் புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன்.

என்னால் தேர்வை ஒழுங்காக எழுத முடிய‌வில்லை. நிறைய கேள்விகளுக்குப் பதில் எழுதத் தெரியாமல் விழித்தேன். ஆசிரியர் நேரம் முடிந்ததும் தாள்களை வாங்கினார்.

இரண்டு நாள்கள் கழித்து, திருமதி சாந்தி தேர்வுத் தாள்களைத் திரும்பக் கொடுத்தார். அவர் சிறப்பாகச் செய்த‌ மாணவர்களின் பெயர்களை முதலில் பட்டியலிட்டார். அனைவரும் கைதட்டினார்கள்.

பிறகு, அவர் என்னைப் பார்த்து, “கயல்! இங்கே வா!” என்றார். கோபத்தில் அவர் கண்கள் மிளகாய்போல் சிவந்து இருந்தன. மனத்தில் பயத்துடன் நான் அவரை நோக்கி நடந்தேன். என் வினாத்தாளை நீட்டி, “முப்பது மதிப்பெண்கள்தான் பெற்றிருக்கிறாய்,” என்று அவர் சொன்னதும் என் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.

திருமதி சாந்தி என்னைப் பள்ளி முடிந்ததும் அவர் அறைக்கு அழைத்துச் சென்றார். தேர்வுக்குமுன் கண்டிப்பாக நிறைய பயிற்சிகள் செய்ய வேண்டும் என அவர் கூறினார். முயற்சி செய்பவருக்கே வெற்றி கிட்டும் என்பதை அவர் எனக்கு எடுத்துரைத்தார்.

நான் என் தவற்றை உணர்ந்தேன். இனிமேல் தேர்வுக்கு விடாமுயற்சியுடன் படித்து எதிர்வரும் தேர்வுகளை மிகவும் சிறப்பாகச் செய்வேன் என்று ஆசிரியரிடம் நான் உறுதி கூறினேன்.

மாதங்கள் கடந்தன. ஆசிரியரிடம் சொன்னதுபோல் நான் ஆண்டிறுதித் தேர்வுகளுக்குத் தயார் நிலையில் வந்து தேர்வுக் கூடத்தில் உட்கார்ந்து தேர்வை எழுதினேன். ஆசிரியர் கூறிய அறிவுரையின்படி நிறைய பயிற்சிகள் செய்ததன் பலனாக என்னால் தேர்வைச் சிறப்பாக எழுத முடிந்தது.

இரு வாரங்களுக்குப்ப்பின், தேர்வு முடிவுகள் வந்தன. நான் எல்லாப் பாடங்களிலும் சிறப்பாகச் செய்திருந்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆசிரியர் கூறிய அறிவுரையை நான் என்றும் மறக்க மாட்டேன்.

கயல் ராஜா, தொடக்கநிலை 5.
கயல் ராஜா, தொடக்கநிலை 5. - படம்: எவெர்கிரீன் தொடக்கப்பள்ளி
குறிப்புச் சொற்கள்
மாணவர்ஆசிரியர்தேர்வு