சிறாரைக் கவர்ந்த ‘கதைத் திருவிழா’

சிறாரைக் கவர்ந்த ‘கதைத் திருவிழா’

1 of 4
படம்: சிவாய சுப்பிரமணியம்
படம்: சிவாய சுப்பிரமணியம்
படம்: சிவாய சுப்பிரமணியம்
படம்: சிவாய சுப்பிரமணியம்

21 Sep 2026 - 6:00 am

3 mins read

கதைகள் என்றாலே சிறுவர்களுக்குக் கொள்ளைப் பிரியம்தானே!

அதிலும் மேடையில் வேற்றுலக மனிதர்கள் தோன்றி ஆச்சரியப்படுத்த, வண்ணமயமான ஒப்பனையில் வந்த கலைஞர்களின் ஆட்டம் உற்சாகமூட்ட, கொண்டாட்டத்துக்கு அளவேது?

அப்படியொரு குதூகலமான கதை உலகிற்குள் சிறுவர்களை அழைத்துச் சென்றது ஏகேடி கிரியேஷன்ஸ் அண்மையில் ஏற்பாடு செய்த ‘கதைத் திருவிழா 2026’.

‘மாயக்குதிரை’ தெருக்கூத்து நாடக கலைஞர்களுடன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முனைவர் ராதிகா தினேஷ்.
‘மாயக்குதிரை’ தெருக்கூத்து நாடக கலைஞர்களுடன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முனைவர் ராதிகா தினேஷ். - படம்: சிவாய சுப்பிரமணியம்

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில், தமிழ் இளையர் விழாவின் ஓர் அங்கமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இந்த விழா அரங்கேறியது.

இதன் ஓர் அங்கமாக, ‘மாயக்குதிரை’ என்ற தலைப்பில் தெருக்கூத்து நாடகம் ஒன்று மேடையேறியது. தமிழகத்தின் பாரம்பரிய தெருக்கூத்துக் கலைஞர் பி. ராஜகோபால் எழுதிய இந்நாடகத்தில், மூன்று தமிழக மூத்த கலைஞர்களுடன் ஏகேடி அமைப்பின் ஐந்து உள்ளூர் இளையர்களும் இணைந்து நடித்தனர்.

‘கதைத் திருவிழா 2026’ நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக அரங்கேறிய ‘மாயக்குதிரை’ தெருக்கூத்து நாடகம்.
‘கதைத் திருவிழா 2026’ நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக அரங்கேறிய ‘மாயக்குதிரை’ தெருக்கூத்து நாடகம். - படம்: சிவாய சுப்பிரமணியம்

சிறுவர்கள் எளிதாகப் புரிந்து ரசிக்கும்படி, நகைச்சுவை ததும்ப இந்த நாடகம் அமைந்தது. நடிகர்கள் பார்வையாளர்களுடன் நேரடியாக உரையாடி, விடுகதைகள் கேட்டு அவர்களை உற்சாகப்படுத்தினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முனைவர் ராதிகா தினேஷ், இப்படிப்பட்ட பாரம்பரியக் கலைகள் மேடையேற்றப்படும்போது, குழந்தைகள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமில்லாமல் அந்தக் கலையோடு மனதார ஒன்றிவிடுகிறார்கள் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரில் எழுத்துப் பயிற்சிகளாலும் தேர்வுகளாலும் மட்டுமே குழந்தைகளிடம் தமிழை உயிர்ப்புடன் வளர்த்துவிட முடியாது. சிரிப்பு, விளையாட்டு, கற்பனை வளம் கலந்த மகிழ்ச்சியான அனுபவமாக மொழி அமைவதே முக்கியம்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக முனைவர் ராதிகா தினேஷ் கலந்துகொண்டார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக முனைவர் ராதிகா தினேஷ் கலந்துகொண்டார். - படம்: சிவாய சுப்பிரமணியம்

தமிழ் மரபு என்பது இளைய தலைமுறை பெருமையோடு கொண்டாடக் கூடிய ஒன்று என்பதை ஏகேடி கிரியேஷன்ஸ் அமைப்பு கடந்த பதினைந்து ஆண்டுகளாக நிலைநிறுத்தி வருவதாக அவர் பாராட்டினார்.

சிறுவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கும் நோக்கில் கதைப்பாடல், வில்லுப்பாட்டு, குறுங்காணொளி, குறும்படம் ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டிகள் விழாவிற்கு முன்னதாக நடத்தப்பட்டிருந்தன.

போட்டிகளுக்கு முன்னதாக, அனைத்துலக கதைசொல்லி ஜீவா ரகுநாத் வழிகாட்டுதலில் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கதைப்பாடல், வில்லுப்பாட்டு பயிலரங்குகள் நடத்தப்பட்டு, பெரியவர்களும் இக்கலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

“குழந்தைகள் புத்திசாலிகளாக வளர, அவர்களுக்கு நிறையக் கதைகள் சொல்ல வேண்டும் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியிருக்கிறார்,” என்று ஏகேடி கிரியேஷன்ஸ் இயக்குநர் ராணி கண்ணா கதைகளின் முக்கியத்துவம் குறித்து கூறினார்.

இரண்டு மனிதர்களுக்கு இடையிலான மிகக் குறுகிய தூரம் ஒரு கதைதான் என்ற அவர், இளையர்கள் கதைகளைக் கேட்பவர்களாக மட்டும் இல்லாமல், தாங்களே சொந்தமாகப் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே விழாவின் நோக்கம் என்று தெரிவித்தார்.

கதைப்பாடல், வில்லுப்பாட்டு, குறுங்காணொளி, குறும்பட போட்டிகளில் விருது பெற்றவர்களுக்கு விழாவின்போது சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கதைப்பாடல், வில்லுப்பாட்டு, குறுங்காணொளி, குறும்பட போட்டிகளில் விருது பெற்றவர்களுக்கு விழாவின்போது சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. - படம்: சிவாய சுப்பிரமணியம்

கதைப்பாடல் போட்டியில் பங்கேற்று வாழ்க்கையில் தனது முதல் பரிசை வென்றார் உட்குரோவ் ஸ்பார்க்கிள்டாட்ஸ் பாலர்பள்ளியில் பயிலும் 5 வயது ரக்‌‌ஷனா ராம்.

“பள்ளியில் எனது ஆசிரியர் என்னைக் கதை சொல்லச் சொன்னார். எனக்குக் கதை சொல்வது மிகவும் பிடிக்கும்,” என்று மகிழ்ச்சியோடு அவர் கூறினார்.

சிங்கப்பூரில் பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து போன்ற பாரம்பரியக் கலைகளை நேரில் பார்த்த அனுபவம் தங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருவதாக ரக்‌ஷனாவின் தாயார் திருவாட்டி ஹ. அக்‌‌ஷயா கூறினார்.

பாரம்பரியக் கதைகளையும் கலைகளையும் மிக சுவாரசியமான முறையில் இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்த்தது இந்த கதைத் திருவிழா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்