உலக கலை ஒலிம்பியாட்டில் முதலிடம் பிடித்த ஆரத்யா

உலக கலை ஒலிம்பியாட்டில் முதலிடம் பிடித்த ஆரத்யா

படம்: அனுராக் சுந்தர்

17 Aug 2026 - 5:30 pm

2 mins read

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற உலக கலை ஒலிம்பியாட் போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஆரத்யா சுந்தர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

விளையாட்டுடன் கலையைக் கலந்து படைக்கப்பட்ட அரிய ஓவியத்துக்காக அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டது.

அனைத்துலகக் குழந்தைகள் கலை அறக்கட்டளை ஒலிம்பியாட் போட்டிக்கு ஏழாவது முறையாக ஏற்பாடு செய்திருந்தது. ஜூலை 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்ற அப்போட்டியில் ஆரத்யா வெற்றியடைந்தார்.

‘தி ஆர்ட்டிஸ்ட்-அத்லட்’ (The Artist-Athlete) என்ற தலைப்பில் அச்சிறுமி ஓவியம் வரைந்திருந்தார். கலை, விளையாட்டு ஆகிய இரு துறைகளும் ஒன்றே எனும் பார்வையை அப்படைப்பு வெளிப்படுத்தியது.

உலக கலை ஒலிம்பியாட் போட்டியில் முதலிடம் பிடித்த ஆரத்யாவின் ஓவியம்.
உலக கலை ஒலிம்பியாட் போட்டியில் முதலிடம் பிடித்த ஆரத்யாவின் ஓவியம். - படம்: அனுராக் சுந்தர்

கலையையும் விளையாட்டையும் தனித்தனியாகப் பார்க்க நான் விரும்பவில்லை எனக் கூறிய ஆரத்யா, ஓவியக் கலையிலும் விளையாட்டிலும் தாம் ஆர்வம் கொண்டவர் என்பதால் அந்தத் தலைப்பு தம் மனத்திற்கு நெருக்கமாக இருந்ததாகத் தெரிவித்தார்.

பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முடக்காமல், அவர்களின் பன்முகத் திறன்களை ஆராய அனுமதிக்கும் அந்த ஓவியத்தின் நோக்கம், அப்போட்டியை நடத்திய அமைப்பின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் அஷ்ஃபாக் இஷாக்கை பெரிதும் கவர்ந்தது.

ஆரத்யாவின் சிறப்பு, அவரது கலைத் திறனில் மட்டும் அல்ல; கலையைச் சிந்தனையின் ஊடகமாகப் பயன்படுத்தும் அவரது வளர்ந்து வரும் ஆற்றலிலும் உள்ளது என அவர் பாராட்டினார்.

இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் பிறந்த ஆரத்யாவிற்கு, அந்நகரின் பிரம்மாண்ட சுவரோவியங்களே கலை மீதான முதல் ஈர்ப்பை ஏற்படுத்தின.

பின்னர், ஏழு வயதில் சிங்கப்பூருக்கு வந்த அவர், ‘லிட்டில் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஸ்டூடியோ’, நன்யாங் நுண்கலைக் கழகத்தின் இளையர் கலைப் பிரிவு ஆகியவற்றின் மூலம் முறைப்படியான கலைப் பயிற்சியைத் தொடங்கினார்.

சிங்கப்பூர்தான் ஆரத்யாவின் ஓவியக் கலைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த இடம் என அவரது தந்தை அனுராக் சுந்தர் தெரிவித்தார்.

மேலும், இங்குள்ள பல்வேறு கலாசாரங்கள், மொழிகள், அரும்பொருளகங்கள், கட்டடக்கலைச் சூழல் ஆகியவை ஆரத்யாவின் சிந்தனையையும் வெளிப்படுத்தும் முறையையும் செழுமைப்படுத்தியதாக அவர் கூறினார்.

தமிழாக்கம்: கி. விஜயலட்சுமி

குறிப்புச் சொற்கள்