பயிற்சியால் கிடைத்த பரிசு

பயிற்சியால் கிடைத்த பரிசு

படம்: தோ பாயோ வெஸ்ட் சமூக மன்றந்தின் இந்திய அமைப்பின் செயற்குழு

05 Oct 2026 - 5:23 am

2 mins read

தோ பாயோ சமூக மன்றத்தில் நடந்த பரத நாட்டியப் போட்டியில் 10 வயதுச் சிறுமி ஹஷ்வினா முதல் பரிசை வென்றார்.

அம்மன்றத்தின் இந்திய நற்பணிச் செயற்குழுவினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்தப் போட்டியில் மொத்தமாக 34 மாணவர்கள் பங்கேற்றனர்.

சிம்ஸ் அவென்யூவில் உள்ள ஒலிம்பியாட் அனைத்துலகப் பள்ளியில் படிக்கும் ஹஷ்வினாவுக்கு இது முதல் தனி நடனமாகும்.

2023ஆம் ஆண்டு முதல் பரதநாட்டியம் கற்று வரும் ஹஷ்வினா, இந்தப் போட்டிக்காகத் தனது நடன ஆசிரியை ராமலட்சுமி தேர்ந்தெடுத்த ‘காளிங்க நர்த்தனம்’ என்ற பாடலுக்கு நடனமாடினார். 

கிருஷ்ணரும் பாம்பும் சண்டையிடுவதை விவரிக்கும் இந்த நடனத்தைச் சிறப்பாக ஆடுவதற்காக ஹஷ்வினா, மூன்று வாரங்கள் பயிற்சி மேற்கொண்டார். 

கடினமான அசைவுகளைக் கொண்ட இந்த நடனத்தை, பள்ளிப் படிப்பையும் சமாளித்துக்கொண்டு மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டதாக ஹஷ்வினா கூறினார்.

காளிங்க நர்த்தனம் ஆடி முதல் பரிசு வென்ற ஹஷ்வினா.
காளிங்க நர்த்தனம் ஆடி முதல் பரிசு வென்ற ஹஷ்வினா. - படம்: சாரா பின்டோ

“இதற்கு முன் குழு நடனங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளேன். இந்த முதல் தனி நடனத்தின் மூலம் கிடைத்த வெற்றி  எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது,” என அவர் கூறினார்.

எதிர்காலத்தில் நடிகை ஷோபனா போன்ற சிறந்த நடனக் கலைஞராகிச் சாதனை படைக்க வேண்டும் என்பதே இவரது குறிக்கோள். 

மேலும், தான் ஒரு நடன ஆசிரியராகி மற்றவர்களுக்கு நடனம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் இதுபோல இன்னும் பல நடனப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வெல்ல வேண்டும் என்றும் அவர் உறுதியுடன் கூறுகிறார்.

ஒலிம்பியாட் அனைத்துலகப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயதுச் சிறுமி சாரா பின்டோ, நடனப் போட்டியில் இரண்டாம் பரிசைத் தட்டிச் சென்றார்.

போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற சாரா பின்டோ.
போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற சாரா பின்டோ. - படம்: சாரா பின்டோ

2022ஆம் ஆண்டு முதல் பரதநாட்டியம் கற்று வரும் இவர், தற்போது ‘சுயம்பு ஃபைன் ஆர்ட்ஸ்’ கலைப்பள்ளியைச் சேர்ந்த குரு அமிர்தினி சிவாகரனின் வழிகாட்டுதலின் கீழ் பரதநாட்டியத்தில் மூன்றாம் நிலை பயின்று வருகிறார். 

இந்தப் போட்டிக்காகத் தொடர்ந்து 15 நாள்கள், அன்றாடம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு சாரா பயிற்சி செய்தார்.

“இந்த வெற்றி எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எதிர்காலத்தில்  சிறந்த பரதநாட்டிய ஆசிரியராக வேண்டும் என்பதே என் லட்சியம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பயிற்சிபரதநாட்டியம்நடனம்போட்டி