லண்டன்: சதுரங்க விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற விளையாட்டாளரை வீழ்த்திய ஆக இளையவர் எனும் உலக சாதனையைப் படைத்துள்ளார் போதனா சிவானந்தன்.
இம்மாதத் தொடக்கத்தில் 2025 பிரிட்டிஷ் சதுரங்க வாகையர் (championship) போட்டியின் ஐந்தாம் சுற்றில் பீட்டர் வெல்ஸ் எனும் 60 வயது கிராண்ட்மாஸ்டரை அவர் தோற்கடித்தார். அப்போது அவருக்கு வயது பத்து ஆண்டுகள், ஐந்து மாதங்கள், மூன்று நாள்கள்.
இதற்குமுன் கடந்த 2019ஆம் ஆண்டு, 10 ஆண்டுகள், 11 மாதங்கள், 20 நாள்கள் வயதானபோது அமெரிக்காவின் கரிஸா யிப் அச்சாதனையைப் படைத்திருந்தார்.
பிரிட்டிஷ் தமிழரான போதனா, லண்டனின் ஹேரோ நகரில் வசித்து வருகிறார். அவருடைய பெற்றோர் இருவரும் பொறியாளர்கள்.
தாமோ தம் மனைவியோ நன்கு சதுரங்கம் விளையாடக்கூடியவர்கள் அல்லர் என்றும் அவ்விளையாட்டில் போதனாவின் திறமை வியப்பளிக்கிறது என்றும் அவருடைய தந்தை சிவானந்தன் கூறினார்.
கொவிட்-19 முடக்கநிலையின்போதுதான் சதுரங்கம் விளையாடத் தொடங்கினார் போதனா. அப்போது அவருக்கு வயது ஐந்து. குடும்ப நண்பர் இந்தியாவிற்குத் திரும்பியபோது சதுரங்கப் பலகையை அவருக்குப் பரிசளித்துச் சென்றார்.
சதுரங்கக் காய்களை முதலில் பொம்மைகளைப்போல் நினைத்து விளையாடிய அவருக்கு மெல்ல மெல்ல அவ்விளையாட்டின்மீது ஆர்வம் கூடியது.
சதுரங்கம் விளையாடுவது தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றும் அது கணிதம் போன்ற பாடங்களைப் பயில உதவுகிறது என்றும் போதனா ‘பிபிசி’ ஊடகத்திடம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இப்போது இன்டர்நேஷனல் மாஸ்டராக இருக்கும் போதனாவின் கனவு கிராண்ட்மாஸ்டராக வேண்டும் என்பதுதான்.