1400களில் மலாக்கா வந்த தென்னிந்திய வணிகர்களுக்கும் உள்ளூர் மலாய், சீனர்களுக்கும் இடையேயான கலப்புத் திருமணங்களால் உருவானதே ‘செட்டி மலாக்கா’ சமூகம். அச்சமூகத்தைச் சார்ந்தவர்கள் பின்பு சிங்கப்பூருக்கும் வந்து குடியேறினர்.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க செட்டி மலாக்கா சமூகத்தினரைப் பற்றி அறியும் வாய்ப்பை மாணவர்கள் சென்ற வார இறுதியில் பெற்றனர்.
பெரானாக்கான் அரும்பொருளகம், சிங்கப்பூர் பெரானாக்கான் இந்தியர் (செட்டி மலாக்கா) சங்கத்தோடு இணைந்து நவம்பர் 23, 24ஆம் தேதிகளில் ‘பெரானாக்கான் இந்தியர்களோடு பாத்திக் கதைகள்’ எனும் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருந்தது.
‘பாத்திக்’ கைவினை நடவடிக்கைகள்
சூடான மெழுகினால் அழகிய வடிவங்களை வரைந்து, வண்ணச் சாயங்கள் கொண்டு துணிகளை அழகுபடுத்தும் முறையே ‘பாத்திக்’.
இத்தகைய ‘பாத்திக்’ துணியைக் கொண்டு, செட்டி மலாக்கா ஆண்கள் அணியும் தலைப்பாகையான ‘கோப்பியா’வை (Kopiah) (தமிழில் ‘தலபா’) வடிவமைக்க மக்கள் கற்றுக்கொண்டனர். இத்தொப்பியில் இருக்கும் முக்கோண வடிவம், செட்டி மலாக்கா சமூகத்தினருக்குத் தனித்துவம் வாய்ந்தது.
பலரும் பெரிய ‘பாத்திக்’ துணிகளுக்கும் சேர்ந்து சாயம் பூசினர்.
செட்டி மலாக்கா சமையல்
‘பூலூட் தக்கான்’ எனும் செட்டி மலாக்கா பலகாரத்தைத் தயாரிக்க பொதுமக்கள் கற்றுக்கொண்டனர். தேங்காய்ப் பால், ஒருவகைப் பூ (butterfly pea flower) உட்புகுத்திய பசையுள்ள அரிசி (glutinous rice) மீது முட்டைக் கஸ்டர்ட் (custard) வைத்து வழங்கப்படுவதே இப்பலகாரம்.
“இப்பலகாரத்துக்கு நீண்ட தயாரிப்புமுறை உள்ளது. கடைகளில் உண்ணும் ‘காயா’ பலகாரங்களைவிட சுவை வேறுபட்டதாக இருந்தது,” என்றார் பயிலரங்கில் பங்கேற்ற ஐகன் ராஜன், 13.
தொடர்புடைய செய்திகள்
தன் இரட்டைச் சகோதரி மணிகா ராஜன், 13, உடன் அவர் பெரானாக்கான் அரும்பொருளகத்தையும் சுற்றியும் பார்த்தார்.
‘எவ்வாறு வெவ்வேறு பண்பாடுகள் ஒன்றிணைந்து ‘பெரானாக்கான்’ பண்பாட்டை உருவாக்கின என்பதைக் கண்காட்சிகள் தெளிவாக விளக்கின,” என்றார் மணிகா.
புதிய இணைய அரும்பொருளகம்
செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலையம், ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பெரானாக்கான் அரும்பொருளகம், சிங்கப்பூர் செட்டி மலாக்கா சங்கத்தின் ஆதரவோடு செட்டி மலாக்கா பற்றிய இணைய காட்சிக்கூடத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவாக்கியுள்ளனர். அதை https://www.artsteps.com/view/64d984c895642eb6bce4e8ca இணையத்தளத்தில் காணலாம்.