மீன்கள் வாழும் கடலைத் தூய்மையாக வைத்திருப்பது நம் கடமை. எனவே குப்பை போடுவது தீய செயல். அவ்வாறு குப்பை போடுவதால ஏற்படும் பாதிப்புகளை மீன் போலவும், ஆமை போலவும் வேடமிட்டு கதைகளாகக் கூறி அழகிய பிள்ளைகள், பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
பேச்சு, பாடல், நாடகம் என கலைகள் வழி தமிழ் கற்பிக்கும் வகையில் ஏகேடி கிரியேஷன்ஸ் அமைப்பு ‘ஆனந்தக் கல்வி’ எனும் வகுப்புகளை மேற்கொண்டுள்ளது.
இதற்காக அம்மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரும்பு, மொட்டு, நறுமுகை ஆகிய மூன்று நிலை வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
தங்களுக்குப் பிடித்த வகையில் அமைந்த வீடுகளில் தனித்தனியாக வாழ விரும்பும் மூன்று பன்றிக் குட்டிகளின் கதையை நாடகமாகப் படைத்தனர் மொட்டு வகுப்பு மாணவர்கள். அவற்றின் தாயார் தமது ஓநாய் நண்பர் உதவியுடன் பாடம் புகட்டும் வகையில் அக்கதை அமைந்திருந்தது.
இதற்காக, பன்றிக்குட்டிகளின் அழகிய வீடுகளை மாணவர்களே வண்ணமயமாக அமைத்தனர். அந்த வண்ணங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தது.
நறுமுகை நிலை மாணவர்கள், தெனாலிராமன் கதையொன்றினை, பாடல், தாளம் ஆகியவற்றுடன் வில்லுப்பாட்டு பாணியில் அரங்கேற்றினர்.
“பன்றிக் குட்டிகள் கதையில் நடித்தேன். பலர்முன் நடிக்க வேண்டியிருந்ததால் நன்கு பயிற்சி மேற்கொண்டேன். அனைவரும் பாராட்டியது மகிழ்ச்சியளித்தது,” என்றார் ஒன் வேர்ல்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் மாணவர் அபினவ் பாலமுருகன்.
தொடர்புடைய செய்திகள்
குறுநாடகம் வழி கதை சொல்லும் அங்கத்தில் ஓநாயாக நடித்ததுடன், வில்லுப்பாட்டிலும் பங்கேற்றார் தொடக்கநிலை ஐந்தில் பயிலும் மாணவர் வரின்வேல் சங்கர் கணேஷ்.
“அனைவர் முன்னிலையிலும் படைக்கப் பயமாக இருந்தது. ஏதேனும் தவறு நடந்துவிடும் என்று தோன்றியது. ஆனால் இறுதியாகத் தவறுகள் ஏதுமின்றிப் படைத்துவிட்டேன். இதற்காக ஆறு முதல் எட்டு வாரங்கள் பயிற்சி மேற்கொண்டேன்,” என்றார்.
வில்லுப்பாட்டு அங்கத்தில் பங்கேற்ற மாணவி மித்ரா அஜய், “அனைவரும் நன்றாக இருப்பதாகக் கூறிப் பாராட்டினர். ஆனால் என்னால் இன்னும் சிறப்பாகப் படைக்க முடியும். அடுத்தடுத்த முறைகளில் மேலும் சிறப்பாகச் செய்ய விரும்புகிறேன்,” என்றார்.
“பிள்ளைகள் கடின உழைப்பு போட்டு கதைகள், நாடகங்களுக்குத் தேவையான மேடைப் பொருள்களைச் செய்தனர். தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டனர். அவர்களை ஊக்குவிக்கவும், விளக்குகள், இசை, பார்வையாளர்கள் உள்ளிட்ட நேரடியான மேடை அனுபவத்தை வழங்கவும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்,” என்றார் ‘ஏகே தியேட்டர்’, ‘ஏகேடி கிரியேஷன்ஸ்’ நிறுவனங்களின் இயக்குநர் திருவாட்டி ராணி கண்ணா.
அவர்கள் மேடையில் நிகழ்ச்சி படைத்ததைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் சொன்னார்.

