கதை சொல்வதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி பரதநாட்டியத்தில் ஈடுபட்டனர் ‘ஸ்டோரிவித்ஷா’வைச் சேர்ந்த இளம் மாணவிகள். 6லிருந்து 11 வயதுடைய இளம் நடனமணிகள் தமிழ்மொழி மீதான நாட்டத்தை நடன அபிநயங்கள் மூலம் அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருந்தனர்.
சனிக்கிழமை (23 பிப்ரவரி) ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையத்தில் ‘மந்திர புத்தகம்’ எனும் கலை படைப்பு அரங்கேறியது. நடனம் மூலம் சிறுவர்களின் தமிழ்மொழி ஆர்வத்தை சுண்டி இழுக்கும் நோக்கத்தில் அப்படைப்பு நிகழ்த்தப்பட்டது.
மாணவர்கள் கதைகள், நடனம், இசை ஆகியவை மூலம் தங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பது தனது தலையாய நோக்கமாக இருந்ததாக பகிர்ந்துகொண்டார் படைப்பின் நடன இயக்குநர் சங்கரி சதீஷ், 38. ‘மந்திர புத்தகம்’ அவருக்கு இரண்டாவது படைப்பாகும்.
வகுப்பு நேரங்களில் மாணவர்களுடன் வைத்த உரையாடல்கள் மூலம் படைப்பின் கதைக்கரு பிறந்ததாகச் சொன்னார் சங்கரி. விநாயகர், மகாகவி பாரதியார், துர்க்கை அம்மன், முருகக் கடவுளுக்கும் ஒளவையாருக்கும் இடையிலான கலந்துரையாடல், கிருஷ்ண பகவானின் உபதேசங்கள் ஆகியவை படைப்பின் கருப்பொருள்கள்.
இந்தக் கருப்பொருள்களை ஒட்டி மாணவர்கள் கதை சொல்வதற்கு அப்பாற்பட்டு நடனங்களிலும் ஈடுபட்டு பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தனர்.
இளம் மாணவர்கள் அவர்களின் சொந்தக் குரல்களில் ஒவ்வொரு கருப்பொருளிலும் இடம்பெறும் கதைகளை கணீரென்று கூறினர். படைப்பில் இடம்பெற்ற நடன அங்கங்களில் ஒவ்வொருவரும் ஒருங்கிணைந்து ஆடியது பார்வையாளர்களை மகிழ வைத்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் படைப்புக்கான முன்னேற்பாடுகள் தொடங்கின. கடந்த 17 ஆண்டுகளாக பரதநாட்டிய பயிற்றுவிப்பாளராக இருக்கும் சங்கரி ஒவ்வொரு முறையும் தனது படைப்புகளுக்கான கதைக்கருவை தனது மாணவர்களிடமிருந்து எடுத்துக் கொள்வதாக கூறினார்.
10 வயதிலிருந்து பரதநாட்டியம் கற்றுக்கொண்டு வரும் சங்கரி தனது பெற்றோர்களின் ஊக்கத்தால் கலைக்காக ஏதோ ஒன்று செய்ய வேண்டுமென்ற உந்துதல் பெற்றதாக சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
புதுமையான பாணியில் சிறுவர்களின் மொழி வளம் புலமை பெற வேண்டும் என்பதற்காக இதுபோன்ற படைப்புகளைச் செய்யத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.
“மாணவர்கள் நடனம் மட்டும் கற்காமல் அவர்களின் மொழி புழக்கத்தையும் அதிகரித்துள்ளனர். எடுத்துக்காட்டிற்கு அவர்களால் ஆத்திச்சூடியை பிழையின்றி சொல்ல முடிந்தது. இதுபோன்ற முயற்சிகளால் நான் என் மாணவர்களுக்கு மட்டுமின்றி இதர சிறுவர்களுக்கும் இப்படைப்பை சமர்ப்பிக்க விரும்புகிறேன்,” என்றார் சங்கரி.
“நான் முதல் முறையாக ஒரு படைப்பில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. நடனத்தில் வரும் அபிநயங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு இன்னும் அதிகமான படைப்புகளில் நடனமாட ஆசையாக உள்ளது,” என்று நடனமணி ஆதியா, 7, கூறினார்.

