செல்லப்பிராணிகளை அரவணைக்க விதைபோடும் சிறுவர் நூல்

3 mins read
56f596c7-4d16-42b0-b44a-e72c5debdaba
சுட்டிச் சின்னு எழுத்தாளர் சூர்ய ரத்னா. - படம்: அனுஷா செல்வமணி

செல்லப்பிராணிகளை அரவணைக்கும் நற்பண்பை சிறுவர்களுக்கு இளவயதிலேயே புகட்ட வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மூன்று நூல்களை எழுதியுள்ளார் எழுத்தாளர் சூர்ய ரத்னா, 57.

சூர்ய ரத்னா ‘சுட்டிச் சின்னு’ தொடர் என்கிற சிறுவர் நூல் வரிசையை வெளியிட்டுள்ளார். நான்கு முதல் ஒன்பது வயது வரையிலான பிள்ளைகள் படித்து மகிழும் வண்ணம் இந்த நூல் வரிசை அமைந்துள்ளது.

சிறுகதைகள், நாவல்கள் எனப் பல கதைகளை எழுதியுள்ள சூர்ய ரத்னா, நெடுநாள் கழித்து மீண்டும் சிறுவர் கதைகளை எழுதத் தொடங்கியுள்ளார்.

இந்த மூன்று கதைகளில் இடம்பெறும் முக்கியக் கதாபாத்திரம், சூர்ய ரத்னா வீட்டில் வளர்க்கும் செல்லக் கறுப்புப் பூனை சின்னு.

‘சீக்கிரம்! சீக்கிரம்!’, ‘நண்பன் டா!’, ‘இருட்டில் ஒரு’ எனும் மூன்று தலைப்புகள் கொண்ட அந்த நூல்கள் பொறுமை, அச்சம், கூடா நட்பு ஆகிய பண்புகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் சிறுவர் கதைகள் பல இருந்தாலும் சொந்த செல்லப்பிராணியை முக்கியக் கதாபாத்திரமாக வைத்து சிறுவர் கதையை எழுதியிருப்பது இதுவே முதன்முறை என நம்புகிறார் சூர்ய ரத்னா.

செல்லப்பிராணிகளை வாங்குவதற்கு பதிலாக அவற்றைத் தத்தெடுக்க வேண்டும் என்பதையும் அவற்றைக் குடும்பத்தில் ஒருவராகப் பார்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது இந்த நூல் வரிசை.

“சிங்கப்பூரில் செல்லப்பிராணிகள் கைவிடப்படும் போக்கு அதிகரித்து வருகிறது. அத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது என்பதைச் சிறுவர்களுக்கு இளவயதிலேயே புகுத்தினால்தான் அவர்கள் புரிந்துகொள்வார்கள்,” என்கிறார் சூர்ய ரத்னா.

சிறுவயதிலிருந்தே சூர்ய ரத்னா வீட்டில் செல்லப்பிராணிகள் சூழ்ந்திருக்கும் சூழலில்தான் வளர்ந்து வந்தார்.

பெரும்பாலும் நாய்களை வளர்த்து வந்த அவரிடம் ஒருமுறை நண்பர் ஒருவர் கறுப்புப் பூனை ஒன்றுக்கு தங்குமிடம் தேவைப்படுவதாகச் சொன்னார்.

எதையும் யோசிக்காமல் உடனடியாக அப்பூனையை வளர்க்க விரும்பிய சூர்ய ரத்னா, அதற்குச் சின்னு எனப் பெயரிட்டார்.

நூல் வரிசையிலும் சின்னு எனப்படும் அந்தக் கதாபாத்திரம் வீட்டில் ஒருவராக பின்னிப் பிணைந்திருப்பது போலத்தான் சூர்ய ரத்னா கதையைச் செதுக்கியுள்ளார்.

சிங்கப்பூரின் முதல் பெண் தமிழ் நாவலாசிரியராக அறிமுகமாகிய சூர்ய ரத்னா, தமது தொடக்க நாவலான ‘மேற்கே உதிக்கும் சூரியன்’ மூலம் இலக்கிய உலகில் நுழைந்தார்.

இருமொழிக் கல்விக்குரிய லீ குவான் யூ நிதி உதவி பெற்றுள்ள சூர்ய ரத்னா, சனிக்கிழமை (ஜூன் 14) தேசிய நூலகத்தில் நூல் வரிசையை வெளியிட்டார்.

இந்த நூல்கள் கல்வி அமைச்சு பாலர் பள்ளிகள் அனைத்திலும் கற்றல் வளமாக பயன்படுத்தப்படும். மேலும், அனைத்து நூலகங்களிலும் இவற்றை இரவல் பெற முடியும்

“சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் பல உள்ளன. ஆனால், எனது நூல் வரிசையில் நீதியைப் புகுத்துவதற்குப் பதிலாக சிறுவர்கள் அதை மகிழ்ந்து படிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு சுவாரசியமான உரையாடல் நடவடிக்கையையும் சேர்த்துள்ளேன்,” என்று சூர்ய ரத்னா தெரிவித்தார்.

சிறுவர்கள் பொதுவாக விலங்குகள் சார்ந்த கதைகளைப் படிக்க அதிக ஆர்வம் காட்டுவதாகச் சொன்ன சூர்ய ரத்னா, தமது நூல் வரிசை அதற்கு வழியமைக்கும் என நம்புகிறார்.

“வாசிக்கும் திறனை மெருகூட்ட நான் என் மகளை நூலகங்களுக்கு அழைத்துச் செல்வேன். சிறுவயதிலேயே வாசிக்கும் பழக்கத்தைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பது அவர்கள் சரளமாகப் பேச உதவும். அதனால்தான் என் மூன்று வயது மகளை இந்த நூல் வெளியீட்டுக்கு அழைத்து வந்தேன்,” என்று சொன்னார் இல்லத்தரசி கயல்விழி, 32.

குறிப்புச் சொற்கள்