சிறாரின் திறன்களை வளர்த்த நாடகப் பயிலரங்கு

சிறாரின் திறன்களை வளர்த்த நாடகப் பயிலரங்கு

2 mins read
41dd9c3a-fe2e-4dc8-ba2b-05a24ec64f35
அகம் நாடகக்குழுவின் ‘மோமோவீரன்’ பயிலரங்கில் துடிப்புடன் பங்கேற்ற சிறுவர்கள். - படம்: சுந்தர நடராஜ்

சிறாரிடையே நடிப்பு, மேடைப் பேச்சு ஆகிய திறன்களை வளர்க்கும் நோக்குடன் அகம் நாடகக்குழுவின் ‘மோமோவீரன்’ பயிலரங்கு தமிழ் இளையர் விழாவின் ஓர் அங்கமாக நடந்தேறியது.

ஸ்டாம்ஃபோர்ட் கலை மையத்தில் செப்டம்பர் 7, 8 தேதிகளில் நடந்த பயிலரங்கில் மொத்தம் 17 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பயிலரங்கின் முதலாம் நாளன்று, துடிப்புமிகு சுவாரசிய விளையாட்டுகள், நடிப்பு பயிற்சிகள், உத்திகள் எனப் பல அம்சங்கள் சிறாருக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

முதல் நாள் முடிவில் அவர்களுக்கு ‘மோமோவீரன்’ என்ற நாடகத்தின் கதை விவரிக்கப்பட்டு, இரண்டாம் நாள் அவர்கள் அந்நாடகத்தைப் படைக்க தயார் செய்யப்பட்டனர்.

காட்டின் நடுவே பீச் பழத்திலிருந்து பிறக்கும் மோமோவீரன் வளர்ந்த பிறகு அவனது நண்பர்களான விலங்குகளுடன் இணைந்து அரக்கர்களை வீழ்த்துவதே அந்நாடகத்தின் கதை.

சிறாருக்கு எளிதில் புரியும்வண்ணம் நாடகத்தின் வசனங்கள் அமைக்கப்பட்டு இருந்ததோடு பயிற்சிகளும் அவர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தன.

பயிலரங்கின் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான லாசெல் கலைப் பள்ளி பட்டதாரி திமத்தி இம்மானுவேல் இப்பயிலரங்குவழி மாணவர்களுக்குப் பற்பல கதைகளை எளிய வடிவில் அறிமுகப்படுத்த முயன்றதாகக் கூறினார்.

இத்தகைய பயிலரங்குகள்வழி மென்திறன்கள், தன்னம்பிக்கை, குழு ஒற்றுமை ஆகியவற்றைச் சிறுவர்களுக்குப் புகட்ட முடிகிறது என்றார் அவர்.

இப்பயிலரங்கு மூலம் தமது உணர்வுகளை மேலும் சிறப்பாக வெளிப்படுத்த கற்றுக்கொண்டதாக 10 வயது ஜியாத் வெற்றி மரிக்கார் கூறினார்.

நிகழ்ச்சியில் தமக்குப் பழைய நண்பர்களுடன் நேரம் செலவிடும் வாய்ப்பு கிட்டியது மட்டுமன்றி புதிய நட்பு வட்டத்தை உருவாக்கும் வாய்ப்பும் கிடைத்தது மகிழ்ச்சியளித்ததாக அவர் பகிர்ந்துகொண்டார்.

பங்கேற்பாளர் ஒருவரின் பெற்றோரான மதனா சுபாஷ் பாலன், 37, இத்தகைய பயிலரங்குகள் சிறுவர்களின் கற்பனைத் திறனையும் புத்தாக்கத்தையும் வளர்க்க உதவுவதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்