வரலாற்றின் செறிவைப் புகட்டும் ‘சிறுவர்களின் பருவகாலம்’

2 mins read
4baa2c8c-fe05-4e86-9de5-c88d04ac685e
பெற்றோரும் பிள்ளைகளும் ‘ஊறுகா கொலெக்டிவ்ஸ்’ ஏற்பாடு செய்ய மேடை நாடகத்தைப் பார்வையிட்டனர். - படம்: இந்திய மரபுடைமை நிலையம்
multi-img1 of 3

சிங்கப்பூர் வரலாறு, பண்பாடு, சமூகம் போன்ற கூறுகளை எடுத்துரைக்கும் முறையில் ‘சிறுவர்களின் பருவகாலம்’ என்ற பொது வரவேற்பு நிகழ்ச்சி, இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

எஸ்ஜி 60ஐ முன்னிட்டு ‘உரிமைப்பாடு’ என்ற கருப்பொருளில் அமைந்த இந்தப் பொது வரவேற்பு மே 31 தேதியன்று தொடங்கி ஜூன் 29 வரை நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும்.

நகைகள் தயாரிக்கும் பயிலரங்கு, மரக்கட்டை அச்சுகள் வைத்து தோல் பைகளை அலங்கரிக்கும் பயிலரங்கு, ‘ஊறுகா கொலெக்டிவ்ஸ்’ நடத்தும் மேடை நாடகம், கைவினை நடவடிக்கைகள் போன்ற அங்கங்கள் சிறார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

சிங்கப்பூரின் தொடக்க காலத்தில் இங்கு வாழ்ந்த இந்தியர்கள் மேற்கொண்ட வர்த்தகங்கள், தொழில்கள் பற்றிய கண்காட்சி ஒன்றும் இடம்பெற்றது.

மரக்கட்டை அச்சுகளைக் கொண்டு தோல் பைகளை அலங்கரிக்கும் பயிலரங்கு மிகவும் பிடித்திருப்பதாக மாணவர் ஜோசாயா கவினேஷ் கூறினார்.

“எனக்கு இந்தச் சாமந்திப்பூவும் அணிகலன்களும் செய்யும் பயிலரங்குகள் மிகவும் பிடித்திருந்தன.” என்று மற்றொரு மாணவர் அகில் சிவராஜ் கூறினார்.

பிள்ளைகளுடன் கற்றல் மகிழ்ச்சியில் பெற்றோர்களும் பெரியவர்களும் இணைந்தனர்.

இவை போன்ற நடவடிக்கைகள் பண்பாட்டைக் கட்டிகாப்பதாகக் கூறிய திருவாட்டி ஜெசிந்தா தேவி, இங்கு தங்கள் பிள்ளைகளை அழைத்துவரும்படி சக பெற்றோர்களுக்கு ஊக்கமளிக்கிறார்.

இந்தக் கருத்துக்கு அகில் சிவராஜின் பாட்டி, திருவாட்டி சித்ரா வரபிரசாத் உடன்படுகிறார்.

“எனது பேரன் ஊடாடும், கைவினைப் பொருள்களைச் செய்வது போன்ற நடவடிக்கைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வான். இந்நிகழ்ச்சியின் வழி என்னால் அவனுக்குத் தமிழ் மரபை பற்றியும் சிங்கப்பூரின் வரலாற்றைப் பற்றியும் எளிதாக எடுத்துரைக்க முடிகிறது”.

“தற்போதைய காலத்தில் பெரும்பாலானோர் மேற்கத்திய மோகத்தில் மூழ்கியிருக்கின்றனர்”.

இச்சமயத்தில் நமது நம் வேர்களுக்கும் வரலாற்றுக்கும் இடையே உள்ள நமது பிணைப்பை வலுப்படுத்தும் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகவும் அவசியம் என்று 35 வயது பெற்றோர், திருவாட்டி துர்கேஷ்வரி ஷண்முகம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்