சீனப் புத்தாண்டுக்காக சைனாடவுனுக்குச் சென்ற சிறுவர்களே, சைனாடவுன் மரபுடைமை நிலையத்திற்குச் சென்றீர்களா?
கொவிட்-19 பெருந்தொற்றுகாலத்தில் 2020ல் மூடப்பட்ட சைனாடவுன் மரபுடைமை நிலையம், ஜனவரி 2025ல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
திறப்பு சலுகையாக, பிப்ரவரி 16 வரை சிங்கப்பூர்வாசிகளுக்கு அனுமதி இலவசம். சுற்றுப்பயணிகளுக்கு அனுமதிச்சீட்டு பத்து வெள்ளி மட்டுமே. அன்றாடம் காலை 10 முதல் இரவு 7 மணி வரை நிலையம் திறந்திருக்கும்.
அக்காலத்தில் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்திறங்கிய குடியேறிகளின் வாழ்க்கையை மக்களின் கண்முன் நிறுத்துகிறது இந்நிலையம்.
சைனாடவுனின் 48 பகோடா தெருவில், மூன்று பழங்காலக் கடைவீடுகள் அழகாக சீரமைக்கப்பட்டு, சைனாடவுன் மரபுடைமை நிலையமாகக் காட்சியளிக்கின்றன.
நிலையம் முழுவதும் மக்களின் கலகலப்பும் சிரிப்பு சத்தமுமாக ஒலிக்கிறது. சுவாரசியமான வகையில் சிறுவர்களும் பெரியவர்களும் சைனாடவுனின் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பாக அமைகிறது.
நிலையத்தின் வெளிப்புறத்திலேயே சிவப்புத் தலைப்பாகை அணிந்த ‘சாம்சுவி’ பெண்மணியின் சிலை மக்களை வரவேற்கிறது. ‘சாம்சுவி’ பெண்கள் சீனாவிலிருந்து வந்து, இங்கு கட்டுமானத்தில் பணியாற்றியவர்கள்.
1950களில் ஒரு கடைவீட்டின் உட்புறம் எப்படி இருந்ததோ, அதை அப்படியே காட்சிப்படுத்துகிறது இந்நிலையம்.
தொடர்புடைய செய்திகள்
ஒரு சராசரி கடைவீட்டின் முதல் மாடியில் பல்வேறு வணிகங்கள் இருந்தன. மேல்மாடிகளில் மக்கள் தங்கினர். சிறு சிறு அறைகளில் நிறைய பேர் தங்கியதால், இடத்திற்கே பற்றாக்குறையாக இருந்தது. பல குடும்பங்களும் ஒரே சமையலறையையும் கழிவறையையும் பகிர்ந்ததால் அடிக்கடி சண்டை சச்சரவுகள் எழுந்தன.
அக்காலத் தையல்கடை, சமையலறை, தலையணையே இல்லாத படுக்கையறை அனைத்தையும் கண்டு, ‘இப்படியும் வாழ்ந்திருக்கிறார்களே’ என நீங்கள் நிச்சயம் வியப்பீர்கள்! இன்று நம் வசதியான வாழ்க்கைமுறையோடு ஒப்பிடுகையில், அவர்களின் கஷ்டங்கள் மனதில் ஆழமாகப் பதியும்.
மரபும் வரலாறும் ஒரு நாட்டின் அடிக்கற்கள்
சிறு மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கப்பூர் இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்றால், அதற்கு முக்கியக் காரணம் 19வது, 20வது நூற்றாண்டுகளில் சிங்கப்பூருக்கு வந்த குடியேறிகளே.
அன்றைய சீனக் குடியேறிகள் பெரும்பாலோர் தம் சொந்த நாட்டில் வறுமையை எதிர்நோக்கியதால், நல்வாழ்வைத் தேடி சிங்கப்பூருக்கு வந்தனர். ஆனால் எதிர்பார்த்ததுக்கு மாறாக, சிங்கப்பூரிலும் வாழ்க்கை மிகவும் கடுமையாக இருந்தது.
திறன்மிக்கவர்கள் மருத்துவர்கள், துணிதைப்பவர்கள், வணிகர்களாக வாழ்க்கை அமைத்துக்கொண்டாலும் பலரும் கல்வியறிவு, தொழில்திறன்கள் இல்லாததால் கூலிகளாக சிங்கப்பூரில் இறக்கப்பட்டனர். அவர்களை முதலாளிகள் விலைக்கு வாங்கினார்கள். சிலர் ஏமாற்றப்பட்டு, கடத்தப்பட்டும் விற்கப்பட்டனர்.
ஒரு சராசரி கூலி அன்றாடம் 100 கிலோகிராம் வரையிலான மூட்டைகளை ஏற்றி இறக்கினார். துறைமுகம், தோப்பு, சுரங்கம், கட்டுமான இடம் போன்றவற்றில் கடும் பணிகளை மேற்கொண்டார்.
அக்காலத்தில் ரகசிய கும்பல்களும் பரவலாக இருந்தன. குற்றங்கள் சராசரியாக நடைபெற்றன. மக்கள் பாதுகாப்புக்காகவும் ரகசிய கும்பல்களில் சேர்ந்தனர்.
அதே சமயத்தில், சீன வணிகர்கள் பலரும் மக்கள்சேவைக்கும் மக்களின் கல்விக்கும் நன்கொடை வாரி வழங்கினர்.
1822ல், சர் ஸ்டேம்ஃபர்டு ராஃபிள்ஸ்சின் ‘ஜேக்சன்’ திட்டம்வழி, சீனர்கள், முஸ்லிம்கள், இந்தியர்கள், ஐரோப்பாசியர்கள் ஆகிய நான்கு இனத்தாருக்கு சிங்கப்பூர் வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அப்போது சிங்கப்பூர் ஆற்றங்கரையோரத்தின் தென்மேற்குப் பகுதி சீனர்களுக்காக ஒதுக்கப்பட்டது.
எனினும், சைனாடவுனிலும் இந்தியர்களும் முஸ்லிம்களும் வாழ்க்கை அமைத்தனர். உதாரணத்திற்கு, சூலியா ஸ்த்ரீட்டில் பல இந்தியர்களும் வணிகங்கள் வைத்திருந்தனர். தென்னிந்திய முஸ்லிம்கள் நாகூர் தர்காவைக் கட்டினர். 1827ல் நாராயண பிள்ளை, சிங்கப்பூரின் ஆகத் தொன்மைய கோவிலான ஸ்ரீ மாரியம்மன் கோவிலைக் கட்டினார்.
இவை அனைத்தையும் பற்றி சைனாடவுன் மரபுடைமை நிலையத்தின் மூன்றாம் மாடியில் மேலும் அறிந்துகொள்ளலாம்.